ஹன்சிகா பிறந்த நாள் ஸ்பெஷல்: அழகாலும் அன்பாலும் ஈர்த்தவர்!

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

குழந்தை நட்சத்திரங்களாக இருந்தவர்கள் வளர்ந்த பிறகு நாயக/ நாயகிகளாக வெற்றிபெற்ற கதைகள் இந்திய திரைப்படத் துறையில் ஏராளம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் இன்று (ஆகஸ்ட் 9) பிறந்த நாள் கொண்டாடும் ஹன்சிகா.

மும்பையில் பிறந்தவரான ஹன்சிகா சிறுமியாக இருந்தபோதே இந்தி திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த 'ஷகலக பூம் பூம்' என்ற குழந்தைகளுக்கான தொடர் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. அதன் வழியாக தமிழ் மக்கள் இதயங்களுக்கு அறிமுகமாகிவிட்டார்.

2007-ல் பூரி ஜெகந்நாத் இயக்கிய 'தேசமுத்ருடு' என்கிற தெலுங்குத் திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார். நாயகியாக நடித்த முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதைப் பெற்றார். அடுத்த ஆண்டு 'ஆப் கா சுரூர்' என்ற படத்தில் ஹிமேஷ் ரேஷ்மியாவுக்கு ஜோடியாக நடித்தார். புனீத் ராஜ்குமாருடம் 'பிந்தாஸ்' என்கிற கன்னடப் படத்திலும் ஜூனியர் என்.டி.ஆருடன் 'கந்த்ரி' என்னும் தெலுங்குப் படத்திலும் நாயகியாக நடித்தார்.

சுராஜ் இயக்கத்தில் 2011-ல் வெளியான 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் நாயகியாக தமிழ்த் திரைத் துறைக்கு அறிமுகமானார் ஹன்சிகா. 1989-ல் வெளியான 'அத்தக்கு யமுடு அம்மாயிக்கு மொகுடு' என்கிற தெலுங்குப் படம் 'மாப்பிள்ளை' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு அதே ஆண்டில் வெளியானது. ரஜினி - அமலா நடித்திருந்த அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதே படத்தை அதே தலைப்புடன் தமிழில் மீண்டும் ரீமேக் செய்தார்கள். அதுதான் இந்த 'மாப்பிள்ளை' இதில் தனுஷ் ரஜினியின் வேடத்திலும் ஹன்சிகா அமலாவின் வேடத்திலும் நடித்திருந்தார்கள். ஆனால், இந்த இரண்டாம் ரீமேக் வெற்றிபெறவில்லை.

அதே ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் 'எங்கேயும் காதல்' படத்தில் நடித்தார் ஹன்சிகா. சிறந்த பாடல்களும் மென்மையான காதல் காட்சிகளும் நிரம்பிய அந்தப் படத்தின் கதைக்கு நாயகி கதாபாத்திரத்துக்கும் ஹன்சிகா அழகாகப் பொருந்தினார். உணர்வுபூர்வமாக நடிப்பதற்கான வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏற்கெனவே வெற்றி பெற்றிருந்த பாடல்கள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஹன்சிகா அவற்றில் தோன்றிய விதம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்தப் படத்தின் வெற்றி ஹன்சிகாவுக்கு தமிழில் பரவலான கவனத்தைப் பெற்றுத் தந்தது.

எம்.ராஜா இயக்கிய 'வேலாயுதம்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் ஹன்சிகா. அந்தப் படத்தில் அழகான கிராமத்துப் பெண்ணாக நகைச்சுவைக்கும் பயன்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாடல்களில் விஜய்க்கு இணையாக சிறப்பாக நடனமாடியிருந்தார். 2011 தீபாவளிக்கு வெளியான அந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. அடுத்த ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் அதுவரை தயாரிப்பாளராக மட்டும் இயங்கி வந்த உதயநிதி ஸ்டாலின் நடிகராகவும் கதாநாயகனகாவும் அறிமுகமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படமும் மிகப் பெரிய வெற்றிபெற்று ஹன்சிகாவுக்கு நட்சத்திர மதிப்பைப் பெற்றுத் தந்தது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ்,, தெலுங்கு, மொழிகளில் நிறையப் படங்களில் நடித்தார். தமிழில் சூர்யாவுடன் நடித்த 'சிங்கம் 2', விஜய்யுடன் 'புலி' என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தார். சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த்துடன் அவர் நடித்த 'தீயா வேல செய்யணும் குமாரு', 'அரண்மனை', 'ஆம்பள', 'அரண்மனை 2' ஆகிய நான்கு படங்களும் வெற்றிபெற்றன. 'அரண்மனை' படத்தில் முக்கியமான கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. சிலம்பரசனுடன் அவர் நடித்த 'வாலு' நீண்ட தாமதத்துக்குப் பிறகு வெளியானாலும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. அதேபோல் உதயநிதி ஸ்டாலினுடன் அவர் நடித்த 'மனிதன்' படத்தில் நாயகனுக்கு தன்னம்பிக்கையும் ஊக்கமும் அளித்து நல்வழிப்படுத்தும் துணையாக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ஜெயம் ரவியுடன் 'ரோமியோ ஜூலியட்' படத்தில் சற்று எதிர்மறைத்தன்மை வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் முன்னணி நட்சத்திரமாக இருந்தபோது வளர்ந்துவரும் நடிகராக இருந்த சிவகார்த்திகேயனுடன் 'மான் கராத்தே' படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு சிவ கார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நட்சத்திரமாக உருவாகியிருக்கிறார். பிரபுதேவாவுடன் நடித்த 'குலேபகாவலி' என்னும் நகைச்சுவைப் படம் வெற்றிபெற்றது. கடந்த ஆண்டு அதர்வாவுடன் அவர் நடித்த '100' படமும் வெற்றிபெற்றது. தற்போது 'மஹா' என்னும் நாயகியை மையப்படுத்திய படத்தில் நடித்துவருகிறார்.

சாயல், உடலமைப்பு, துருதுரு, குழந்தைத்தனமான முகம் ஆகியவற்றுக்காக சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் ஹன்சிகா. ஆனால், மிக விரைவில் இன்றைய ஃபேஷனுக்கு ஏற்ப உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துவிட்டார்.

எல்லோராலும் அன்புடன் பார்க்கப்படும் தோற்றமும் இயல்பும் சிலருக்கு இயல்பாகவே அமைந்துவிடும். அவருடைய படங்களும் அவற்றில் அவர் வெளிப்பட்ட விதமும் அந்த அன்பை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. இது தவிர மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கும் தொடர்ந்து பல நிதி உதவிகளைச் செய்துவருகிறார் ஹன்சிகா. அதோடு பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான இயக்கத்தின் விளம்பரத் தூதராகவும் செயல்பட்டுவருகிறார்.

இதுபோன்ற நல்லெண்ணச் செய்கைகளால் ஹன்சிகாவுக்கு மக்களிடையே அன்பும் நற்பெயரும் கிடைத்திருக்கிறது. அவர் தன்னுடைய படங்களாலும் திரைக்கு அப்பாற்பட்ட செயல்களாலும் அவர் இவற்றை மென்மேலும் அதிகரித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். ஹன்சிகா இன்னும் பல நல்ல திரைப்படங்களில் நடித்து விருதுகளை வென்று சாதனை படைக்க இந்தப் பிறந்த நாளில் அவரை மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE