இந்திய சினிமாவுக்கு ரஜினியின் பங்கு மிகப்பெரியது: மோகன்லால் புகழாரம்

By செய்திப்பிரிவு

இந்திய சினிமாவுக்கு ரஜினியின் பங்கு மிகப்பெரியது என்று மோகன்லால் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த், 'அபூர்வ ராகங்கள்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

பாலசந்தர் இயக்கத்தில் உருவான இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது. அதற்குப் பிறகே பல்வேறு இயக்குநர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வந்தால் ரஜினி திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகள் ஆகின்றன.

இதனை முன்னிட்டு ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தை சமூக வலைதளத்தில் மேற்கொண்டு வருகிறார்கள். இன்று ரஜினியின் 45 ஆண்டுகள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மோகன்லால், மம்மூட்டி, சிவகார்த்திகேயன் தொடங்கி முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக மோகன்லால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"5 தசாப்தங்கள்! 45 வருடங்கள்! இந்திய சினிமாவின் ஒரு அடையாளம். நமது அன்பார்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 45 வருட திரை வாழ்க்கையை முன்னிட்டு #45YearsOfRajinismCDP வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. ரஜினிகாந்த் இந்திய சினிமாவுக்கு அளித்துள்ள பங்கு மிகப்பெரியது. வாழ்த்துகள் சார்".

இவ்வாறு மோகன்லால் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE