நடிப்பின் மூலம் புகழைத் தேடவில்லை: ராதிகா ஆப்தே

By ஐஏஎன்எஸ்

தனக்குச் சவுகரியமான, எளிதில் திருப்தியளிக்கக் கூடிய ஒன்றில் தான் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை என்றும், தான் புகழைத் தேடவில்லையென்றும் நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

2005-ம் ஆண்டு 'வா', 'லைஃப் தோ ஐஸி' திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. தொடர்ந்து பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். தமிழில் 'ஆல் என் ஆல் அழகுராஜா', 'கபாலி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் ராதிகா ஆப்தே பேசியதாவது:

"நான் இங்கு புகழுக்காக இல்லை. நடிப்பின் மூலம் கிடைக்கும் கவனம் எனக்குச் சில சமயங்களில் பிடிக்கும். ஆனால், வெற்றி தோல்விகளை நான் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் அவை நிரந்தரமானவை அல்ல. ஆளுக்கு ஆள் அதைப் பார்க்கும் விதம் மாறும். தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவற்றை ஒதுக்கிவிட முடியாது.

ஏனென்றால் அவை உங்கள் பயணத்தில் முக்கியமான அங்கங்கள். ஒரு நடிகருக்குப் பாராட்டுகள் வேண்டும். முதுகில் தட்டிக் கொடுக்க வேண்டும். பாராட்டுகளை விரும்பும் அதே நேரத்தில் தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு துவண்டு விடாமல் இருக்க வேண்டும். எனவே, என் அணுகுமுறையில் ஒரு சமநிலை உண்டு.

நடிக்க நடிக்க நாம் அதில் வளர்ச்சி பெறுவோம் என நினைக்கிறேன். நிறைய வேலைகளைச் செய்யும்போது நிறைய கற்று, நம் திறமைகளைப் பட்டை தீட்டி, என்ன செய்யக் கூடாது என்பதையும் தெரிந்து கொள்வோம். எனவே இது தொடர்ந்து நீடிக்கும் ஒரு வழிமுறை. இதனால் தவறுகளே செய்யமாட்டோம் என்று அர்த்தமல்ல.

புதிய தவறுகளைச் செய்வோம். நான் இதற்கு முன்னால் செய்த முயற்சிகளுக்குத் தொடர்ந்து சவால் விடுக்கவே நினைக்கிறேன். சவுகரியமான ஒரு வட்டத்தில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை".

இவ்வாறு ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

சமீபத்தில், ராதிகா ஆப்தே நடிப்பில் 'ராத் அகேலி ஹை' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி பாராட்டைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE