யாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்

By செய்திப்பிரிவு

யாரையும் மிதித்து இங்கே வரவில்லை, யார் மீதும் ஏறி இங்கு வரவில்லை என ரவீனா டண்டன் தெரிவித்துள்ளார்.

இந்தித் திரையுலகில் 1990 மற்றும் 2000-த்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரவீனா டண்டன். முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் திருமணமாகி குழந்தைகள் பிறந்தவுடன், திரையுலகிலிருந்து விலகியிருந்தார். பின்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக வந்தவர், திரையுலகில் சில படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக வெடித்துள்ளது. பலரும் வாரிசு அரசியல் தொடர்பாக கருத்து தெரிவித்து வரும் வேளையில், ரவீனா டண்டன் கொடுத்துள்ள பேட்டியும் பெரும் பேச்சுப் பொருளாகியுள்ளது.

நாயகியாக இருந்த காலத்தில் உள்ள பாதிப்பு குறித்த கேள்விக்கு ரவீனா டண்டன் பேசியிருப்பதாவது:

"குறிப்பிட்ட நாயகர்கள் அவர்களின் காதலிகள், பிடித்தமான பத்திரிகையாளர்கள் என தனித்தனி கூடாரங்கள் இருக்கும். அதில் எனக்கு அப்போது அதிர்ச்சியாக இருந்த விஷயம் என்னவென்றால் பல பெண் பத்திரிகையாளர்கள் இன்னொரு பெண்ணை ஓரங்கட்டுவார்கள். அதில் சிலர் இன்று ஏதோ துணிச்சலாக நாங்கள் பெண்ணியவாதிகள் என்று கூறிக்கொண்டு பயங்கரமான பெண்ணிய கட்டுரைகளை எழுதுகின்றனர். எனக்கு வேடிக்கையாக இருக்கும்.

அன்றெல்லாம் யாரும் என்னை ஆதரிக்கவில்லை. ஏனென்றால் ஏதாவது (என்னைப் பிடிக்காத) ஒரு நாயகன், அடுத்த பேட்டியைத் தருவதாகச் சொல்லியிருப்பார். அந்நாட்களில் ஏகபோகம் என்பது இருந்தது. எனது நேர்மையின் காரணமாக நான் வாய்ப்புகளை இழக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் என்னைப் பற்றி நிறைய மோசமாக எழுதப்பட்டன. நான் யாரையும் மிதித்து இங்கே வரவில்லை, யார் மீதும் ஏறி இங்கு வரவில்லை.

எனக்கென காட்ஃபாதர்கள் கிடையாது. நான் எந்த கூடாரத்திலும் இல்லை. எந்த நாயகர்களும் எனக்காகப் பேசவில்லை. வாய்ப்பு கிடைக்க எந்த நடிகரின் படுக்கையறைக்கும் செல்லவில்லை, காதலிக்கவில்லை. பல சமயங்களில் என்னை திமிர் பிடித்தவள் என்றே நினைத்தார்கள். ஏனென்றால் நாயகர்களின் சொல்லுக்கு நான் ஆடவில்லை.

அவர்கள் சிரிக்க வேண்டும் என்று நினைத்தபோது சிரிக்கவோ, உட்கார வேண்டும் எனும்போது உட்காரவோ இல்லை. நான் என் விருப்பப்படி இருந்தேன். என் நெறிகளின் படி வாழ்ந்தேன். இதில் ஆச்சரியமென்னவென்றால் பல பெண் பத்திரிகையாளர்கள் என் நிலையைக் குலைக்க முயற்சிப்பார்கள். நான் என் கொள்கைகளின் படியே வாழ நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக, சிறந்த வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன. எனக்கென ஒரு பெயர் சம்பாதித்தேன்"

இவ்வாறு ரவீனா டண்டன் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE