கதைத் தேர்வில் சிறப்பு முயற்சி: விஷ்ணு விஷால் உறுதி

கதைத் தேர்தல் சிறப்பு முயற்சிகளைச் செய்து வருவதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

தமிழில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசன்’. ஜிப்ரான் இசையமைத்த இப்படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்திருந்தது.

இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது. விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படங்களுள் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இந்தப் படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது.

மலையாளத்தில் 'ராட்சசன்' டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதனை சூர்யா டிவி நேற்று (ஆகஸ்ட் 7) ஒளிபரப்பு செய்தது. இந்தத் தகவலை தங்களுடைய ட்விட்டர் தளத்தில் சூர்யா டிவி வெளியிட்டது.

அந்த ட்வீட்டை மேற்கோள் காட்டி விஷ்ணு விஷால் கூறியிருப்பதாவது:

"கேரளாவில் உள்ள என் ரசிகர்களுக்கு.. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. எதிர்காலத்தில் நீங்கள் அனைவரும் தொடர்புகொள்ளத் தக்க ஒரு கதையைத் தேர்வு செய்ய சிறப்பு முயற்சிகளை எடுத்துள்ளேன்"

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டுடன் 'எஃப்.ஐ.ஆர்', 'காடன்', 'மோகன்தாஸ்' ஆகிய படங்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தான் நடித்து வரும் படங்களைத் தொடர்ச்சியாக மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிட விஷ்ணு விஷால் திட்டமிட்டு இருப்பது உறுதியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE