வாரத்தில் 7 நாட்களும் சீரியல்: 'தமிழா தமிழா', 'ஜீன்ஸ்' ரியாலிட்டி நிகழ்ச்சி மீண்டும் தொடக்கம்! - ஜீ தமிழ் சேனலின் விறுவிறு பயணம்

By மகராசன் மோகன்

வாரத்தின் 7 நாட்களிலும் சீரியல் ஒளிபரப்பு ஏன் என்பதற்கான காரணத்தை ஜீ தமிழ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சி வாரத்தில் 7 நாட்களும் சீரியல் என்ற அறிவிப்போடு, நாளை முதல் ஒவ்வொரு ஞாயிறும் 'தமிழா தமிழா', 'ஜீன்ஸ்' ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக ஜீ தமிழ் நிர்வாகிகள் தரப்பில் கேட்டோம்.

''சனி, ஞாயிறு உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் சீரியல் ஒளிபரப்பு என்ற முறையை ஜீ தமிழ் சேனல் சுமார் ஒன்றரை ஆண்டுக்கு முன்பே அறிமுகப்படுத்தியது. அப்போது, 'யாரடி நீ மோகினி', 'செம்பருத்தி' உள்ளிட்ட சீரியல்களை மக்கள் கொண்டாடித் தீர்த்த காலகட்டம். அதே பாணியில் தற்போது மக்களை முழுமையான பொழுதுபோக்கு அம்சத்துக்குள் கொண்டு வரவே இந்த முயற்சி. இது தொடர்ந்து செயல்படுமா என்பதை இப்போது உறுதியாகக் கூற முடியாது.

அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி தற்போது எவ்வளவு கடின உழைப்பைக் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்து சீரியல், ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஷூட் செய்து வருகிறோம். அந்த அடிப்படையில் நாளை முதல் ப்ரியாராமன் தொகுத்து வழங்கும் 'ஜீன்ஸ்' ரியாலிட்டி நிகழ்ச்சி, இயக்குநர் கரு.பழனியப்பன் வழங்கும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியின் ஒளிபரப்பைத் தொடங்குகிறோம். இதனைத் தொடர்ந்து மற்ற நிகழ்ச்சிகள் குறித்து விரைவில் அறிவிப்பு இருக்கும்!''.

இவ்வாறு ஜீ தமிழ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE