கரோனா பரிசோதனையில் நெகட்டிவ்: வீடு திரும்பும் அபிஷேக் பச்சன்

By செய்திப்பிரிவு

கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ஆனதைத் தொடர்ந்து, அபிஷேக் பச்சன் விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். இதில் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா இருவருக்கும் லேசான தொற்று தான் என்பதால், முதலில் குணமாகி வீடு திரும்பினார்கள்.

ஆகஸ்ட் 2-ம் தேதி அமிதாப் பச்சனுக்கு கரோனா நெகடிவ் என்பதால் வீடு திரும்பினார். ஆனால், அபிஷேக் பச்சனுக்கு கரோனா பாசிடிவ் என்பதால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். அபிஷேக் பச்சன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் இருப்பதால் தன் மனம் வலிப்பதாக அமிதாப் பச்சன் தனது வலைப்பூவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனிடையே இன்று (ஆகஸ்ட் 8) அபிஷேக் பச்சனுக்கு நடைபெற்ற கரோனா பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் உறுதியானது. இதனால் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரோனா நெகடிவ் ஆனதைத் தொடர்ந்து அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"சத்தியம் என்றால் சத்தியம் தான். இன்று மதியம் எனக்கு கரோனா தொற்று பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. எனக்கும் என் குடும்பத்துக்கும் நீங்கள் அனைவரும் செய்த பிரார்த்தனைகளுக்கு நன்றி. நானாவதி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE