டிஸ்னியின் 'முலன்' போஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்: ஓடிடி வெளியீடு முடிவால் ஆத்திரம்

By செய்திப்பிரிவு

பிரான்ஸில் திரையரங்க உரிமையாளர் ஒருவர் டிஸ்னி நிறுவனத்தின் 'முலன்' திரைப்பட போஸ்டரை அடித்து நொறுக்கியுள்ளார்.

டிஸ்னி நிறுவனம் தங்களின் பெரிய பட்ஜெட் திரைப்படமான முலனை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவான 'முலன்' சில மாதங்களுக்கு முன்பே திரையரங்கில் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சர்வதேச அளவில் நிலவும் கரோனா நெருக்கடி காரணமாக பெரும்பாலான திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், வெளியாக முடியாமல் தள்ளிப்போன பல்வேறு திரைப்படங்களின் பட்டியலில் முலனும் சேர்ந்தது.

பிரம்மாண்டமாக, பெரிய திரைக்காக எடுக்கப்பட்ட படம் என்பதால், தாமதமானாலும் கண்டிப்பாக திரையரங்கில்தான் 'முலன்' வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிஸ்னி தரப்பு அதிரடியாக, டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 'முலன்' திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்தது. இந்தப் படத்தைப் பார்க்க 29.99 டாலர்கள் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் மேலும் தாங்கள் செலவழித்த பணத்தில் கணிசமான அளவாவது தங்களுக்குத் திரும்பக் கிடைக்கும் என்று டிஸ்னி நம்புகிறது.

இந்நிலையில், 'முலன்' திரைப்படத்துக்காக பல மாதங்களாக விளம்பரம் செய்து வந்த பிரான்ஸ் திரையரங்க உரிமையாளர் ஒருவர், இந்த முடிவால் ஆத்திரமடைந்து, தனது திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த 'முலன்' விளம்பர போஸ்டரை அடித்து நொறுக்கியுள்ளார். இந்தக் காணொலி தற்போது வைரலாகி பத்து லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

இப்படி ஆத்திரமடைந்திருப்பவர் பிரான்ஸில் சினிபால் என்ற திரையரங்கின் உரிமையாளர் ஜெரார்ட் லெமோய்னீ.

இந்தச் சம்பவம் பற்றி லெமோய்னீ பேசுகையில், "இந்தக் காலகட்டத்தில் திரையரங்குகளைத் திறந்து வைத்திருக்கவே கடினமாகப் பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. வரும் வாரங்களில் பிரம்மாண்டமான படங்கள் வெளியாகும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருந்தோம்.

இப்போது 'முலன்' வெளியாகப்போவதில்லை என்பதால், படத்தைப் பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் மக்களுக்கு அந்தப் படத்தைத் திரையிடும் வாய்ப்பை நாங்கள் இழந்துள்ளோம். படம் வெளியாகியிருந்தால், கடந்த சில மாதங்களாக நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு உதவிகரமாக இருந்திருக்கும். இப்படி திரையரங்க வெளியீட்டைப் புறக்கணிப்பது பொதுமக்கள் மனதில் தவறான கருத்தை உருவாக்கும். டிஸ்னியின் இந்த முடிவு மிகக் கடுமையானது, ஏமாற்றம் தருகிறது" என்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதக் கடைசியில் வெளியாகும் 'டெனட்' திரைப்படத்தை தாங்கள் நம்பியிருப்பதாகவும், அதற்கு வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துக்கு நன்றி என்றும் கூறியுள்ள லெமோய்னீ, திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகும்போது அவற்றின் ஆயுள் குறுகிய காலமே என்றும் கூறியுள்ளார்.

பிரான்ஸில் ஜூன் மாதம் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE