கொடியேற்றம் - இந்திய குடும்ப அமைப்பு குறித்த சித்திரம்

By செய்திப்பிரிவு

இந்திய குடும்ப அமைப்பு குறித்தும், அது நிலைநிற்பதற்கான காரணிகள் குறித்தும் பேசும் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அடூர் கோபாலகிருஷ்ணனின் கொடியேற்றம் திரைப்படம், இந்திய ஆண் மகனை குடும்ப அமைப்பு எங்ஙனம் தப்பிக்க முடியாத ஒரு சுழலாக இழுக்கிறது என்பதை நுட்பமாக காட்சிப்படுத்துகிறது.

கொடியேற்றத்தின் நாயகன் ஒரு சோம்பேறி. சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று கருதுகிறவன். தொலைதூரத்தில் வீட்டு வேலை செய்யும் சகோதரியின் காருண்யத்தில் வாழ்பவன். திருவிழாக்கள் எங்கு நடந்தாலும் தேடிச் சென்று பொழுதுபோக்குவது அவனின் வாடிக்கை. இப்படி வெறுமனே பொழுதுபோக்கிவரும் அவனுக்கு திருமணம் நடக்கிறது. குடும்பம் என்ற ஒன்று உருவான பிறகும் அவனது ஊதாரி வாழ்க்கையில் மாற்றமில்லை.

அவனது பொறுப்பற்றத்தனத்தில் கசப்புற்ற அவனது மனைவி நிறைமாத வயிறுடன் தாய் வீட்டிற்கு செல்கிறாள். சகோதரியின் திடீர் திருமணம் அவர்களின் சகோதர பிணைப்புக்கு நடுவில் கண்ணுக்குத் தெரியாத திரையை ஏற்படுத்துகிறது. நமதுநாயகன் லாரியில் கிளீனராக வேலைக்கு செல்லத் தொடங்குகிறான்.

இந்தப் புதிய பொறுப்பு அவனை மனைவியையும், குழந்தையையும் தேடிச் செல்லவைக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் பொறுப்புள்ள மனிதனாக மாறுகிறான். தனது உலகம் மனைவியும், குழந்தையும்தான் என்பதை உணர்ந்து கொள்கிறான்.மனைவிக்கு முதல்முறையாக சேலை வாங்கிக் கொடுக்கும் அந்த இரவில், காலங்களாக எதிர்பார்த்த வசந்தத்தை ஸ்பரிசித்த உணர்வுடன் அவன் மனைவி வெடித்து அழ, படம் நிறைவு பெறுகிறது.

இந்திய ஆண் மகன் என்பவன் ஒருகட்டத்திற்கு மேல் குடும்பம் என்ற அமைப்பின் தலைவனாக பொறுப்பேற்க வேண்டியவன். மனைவி மற்றும் பிள்ளைகளை போஷிக்க கடமைப்பட்டவன். இந்த கடமைகளிலிருந்து அவன் ஒருபோதும் ஓடி ஒளிந்துவிட முடியாது. அவனுக்கு கட்டுப்பட்டு குடும்பத்தை நிர்வகித்து வரவேண்டிய கடமை மனைவிக்குரியது. காலங்காலமாக இந்திய ஆணும், பெண்ணும் அனுபவப்படும் இந்த கண்ணுக்குத் தெரியாத குடும்ப உறவை, அதிலிருந்து ஒருவன் தப்பித்துவிட முடியாது என்பதனை, அதுவே அவனுக்கு சகலமுமாக இருப்பதை கொடியேற்றம் அற்புதமாக காட்சிப்படுத்துகிறது.

இன்றைய பொருளாதார சுதந்திரமும், நாகரீக சிந்தனைகளும் குடும்ப அமைப்பை சிதைத்து வருதாக உள்ள கற்பிதம் மேலோட்டமானதே. குடும்பத்தலைவன் மட்டுமே சம்பாதிக்கும் சமூகத்தில் குடும்பத்தலைவி அவனுக்கு கட்டுப்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அவள் தனது ஆசைகளை, உரிமைகளை துறந்துவிட்டு, குடும்பத்தலைவனின் விருப்பத்திற்கிணங்க நடக்க வேண்டியதாகிறது. இந்த சமூக அமைப்பு மாறி, குடும்பத்தலைவியும் சம்பாதித்து, பொருளாதார சுதந்திரம் பெறுகையில், அவள் முன்பு போல் தனது ஆசைகளை, உரிமைகளை விட்டுக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் தளர்கிறது.

அவள் கேள்வி கேட்கிறாள். தனது உரிமைகளை கோருகிறாள். அது மறுக்கப்படும்போது, குடும்ப அமைப்பிலிருந்து வெளியேற துணிகிறாள். பெண்ணிற்கு கிடைத்திருக்கும் பொருளாதார விடுதலையும், அதனை புரிந்து கொள்ள மறுக்கும் ஆணாதிக்கத்தின் மேல்மட்ட சலசலப்பே இன்றைக்கு அதிகரித்து வரும் விவாகரத்துகள். இந்தியகுடும்ப அமைப்பு இந்த சலசலப்பைக் கடந்து இன்னும் அழமாகவே வேரூன்றியுள்ளது.. அதற்கு காரணமாக இருப்பது குழந்தைகள். குழந்தைகளை முன்னிட்டு குடும்ப உறவை - விருப்பம் இல்லாவிடிலும் - தொடருகிறவர்களாகவே இந்திய ஆணும், பெண்ணும் இருக்கிறார்கள்.

கொடியேற்றம் படத்தில் பிற பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் லாரிடிரைவர் குற்றவுணர்வு கொள்வது அவரது பெண் குழந்தையை முன்னிட்டே. அதேபோல் குழந்தையின் நினைவே நமது நாயகனை மனைவியை தேடிப் போகவும், ஒரு குடும்பத் தலைவனாக பொறுப்பேற்கவும் காரணமாகிறது. ஊர்ப் பெரியவருடன் உறவு வைத்துக் கொள்ளும் இளம் விதவை, என் குழந்தையின் முகத்தில் எப்படி விழிப்பேன் என கூறிக் கொண்டுதான் தற்கொலை செய்து கொள்கிறாள்.

அடூர் கோபாலகிருஷ்ணன் என்ற பெயர் மலையாள சினிமாவின் பெருமிதங்களில் ஒன்று. அவர் பெற்றிருக்கும் சர்வதேச அங்கீகாரம் மற்றும் விருதுகளை கணக்கில் கொண்டால் இந்தப் பெயரை இந்திய பெருமிதங்களில் ஒன்றாகவும் கருதலாம். பத்துக்கும் அதிகமான திரைப்படங்களும் குறைவில்லாத எண்ணிக்கையிலான குறும்படங்களும், ஆவணப் படங்களும் அடூர் கோபாலகிருஷ்ணின் ஆக்கங்கள். இவரது திரைப்படங்கள் 16 தேசிய விருதுகளையும், 17 மாநில விருதுகளையும், பத்துக்கும் மேற்பட்ட சர்வதேச கௌரவங்களையும் பெற்றிருக்கின்றன.

கொடியேற்றம் அடூரின் இரண்டாவது திரைப்படம். 1977 இல் வெளியானது. கொடியேற்றம், கோட்பாட்டு பின்புலத்தில் செய்யப்பட்ட தொழில்நுட்பமாக இல்லாமல் எதார்த்தத்தை அதன் இயல்போடு காட்சிப்படுத்துகிறது. கதை, காட்சி, ஒளிப்பதிவு இவற்றுடன் அடூர் அதிகம் கவனம் எடுத்துக் கொள்வது, ஒலி. ஒவ்வொரு பொழுதுக்கும் ஒவ்வொருவிதமான ஒலி உண்டு என நம்புகிறவர்.
அதிகாலையில் கதிர் அறுப்பது போல் காட்சி என்றால், அதிகாலையில் கதிர் அறுக்கும் ஒலியை பதிவு செய்ய வேண்டும் என்ற கொள்கையுடையவர். கேரள கிராமத்தின் இயற்கை ஒலியால் நிரம்பியது கொடியேற்றம் திரைப்படம்.

கடுகு தாளிப்பது உள்ளிட்ட சின்னச் சின்ன ஒலிகளை கொடியேற்றத்தில் துல்லியமாக கேட்க முடியும். கொடியேற்றத்தின் சிறப்புகளில் ஒன்று நடிகர்கள்.

கோபிதான் சோம்பேறி நாயகன். பொறுப்பற்ற கிராமத்து வெள்ளந்தி மனிதனை அப்படியே கண்முன் கொண்டு வந்திருப்பார். மனைவியைப் பார்க்க அவளது தாய் வீட்டிற்கு செல்கையில் கோபி காட்டும் தயக்கம் அபாரமான நடிகர்களுக்கே உரியது. இந்தப் படம் கோபியை கொடியேற்றம் கோபியாக மாற்றியது. இறுதிவரை அவர் கொடியேற்றம் கோபியாகவே அறியப்பட்டார்.

லாரி டிரைவராக வரும் பாலன் கே.நாயர், கோபியின் மனைவியாக வரும் கேபிஏசி லலிதா, கவியூர் பொன்னம்மா என்று திறமையான நடிகர்கள் திரைப்படத்துக்கு உயிர் கொடுத்திருந்தனர். கதை சொல்லும்விதம், கதாபாத்திரங்கள் உருக்கொள்ளும் நேர்த்தி, கேமராவை பார்வையாளன் உணராதவண்ணம் படமாக்கியிருக்கும் சிறப்பு, ஒளியும், நிழலும் சதா ஊடாடும் ஒளிப்பதிவு என கொடியேற்றம் ஒரு முழுமையான கலானுபவம்.

குடும்ப அமைப்பு தேவையா, இந்த கடமைகள் அவசியமா என்ற கேள்விகளுக்குள் அடூர் புகவில்லை. இதுதான் நமது குடும்ப அமைப்பு, இப்படித்தான் நீயும் நானும் இருக்கிறோம், இவையிவைதான் நம்மை கட்டுப்படுத்துகின்றன என்று சொல்கிறார். அதுவே பல்வேறு புரிதல்களை நமக்குள் உண்டாக்குகிறது.

-கட்டுரையாளர்: ஜான் பாபுராஜ்

தொடர்புக்கு: johnbaburaj74@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE