தமிழ்த் திரையுலகில் வாரிசு அரசியல் உள்ளதா? - கஸ்தூரி விளக்கம்

தமிழ்த் திரையுலகில் வாரிசு அரசியல் உள்ளது என்று நிலவி வரும் குற்றச்சாட்டுக்கு கஸ்தூரி விளக்கமளித்துள்ளார்.

சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை என்பது தலை தூக்கியுள்ளது. கங்கணா ரணாவத் உள்ளிட்ட பலர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். இதனிடையே, சுஷாந்த் சிங்கின் வழக்கு இப்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் வாரிசு அரசியல் பேச்சு எழுந்தவுடன், இதர திரையுலகிலும் வாரிசு அரசியல் குறித்த கருத்துகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. தமிழ்த் திரையுலகில் விஜய், சூர்யா உள்ளிட்டோர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் மீரா மிதுன். அவருடைய பேச்சு பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

தற்போது வாரிசு அரசியல் விவகாரம் தொடர்பாக கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"தமிழ் திரையுலகம் ஒரு அற்புதமான இடம். இங்கு வாரிசு அரசியலோ, கூடாரங்களோ, மாஃபியோக்களோ என்றும் சாத்தியப்படாது. உண்மையில் இங்கு, திரைப்படம் சார்ந்த குடும்பங்களிடமிருந்து வருபவர்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறார்கள், அவர்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், அதை பூர்த்தி செய்ய அவர்கள் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

தமிழ் திரைத்துறையில் வெற்றி பெற இரண்டு விஷயங்கள் மட்டுமே உங்களுக்கு உதவும். அதீத திறமை மற்றும் கொஞ்சம் அதிர்ஷ்டம். இது எல்லாருக்கும் பொருந்தும். அவர்கள் எந்த குடும்பத்தை, மாஃபியாவைச் சேர்ந்த யாராக இருந்தாலும் சரி. இதனால் தான் நம்மிடம் அதீத உழைப்பும் அர்ப்பணிப்பும் இருக்கும் விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்கள் வெற்றிக்கும், பின்புலத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அஜித், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர், பின்புலம் இல்லாமல் அதீதமான திறமையால் வந்ததற்கு எடுத்துக்காட்டுகள். திறமையற்ற, தொழில்முறையற்ற தோற்றவர்கள் மட்டுமே கோலிவுட்டில் சதிகள் குறித்து கற்பனை செய்வார்கள், வாரிசு அரசியல் என்று குறை பேசுவார்கள்"

இவ்வாறு கஸ்தூரி தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE