சுஷாந்த் சிங் மரணம் குறித்த வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புதல்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு குறித்து விசாரணை செய்ய, சிபிஐக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கி தற்கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு சுஷாந்த்தின் அப்பா கே.கே.சிங், ரியா சக்ரபர்த்து மீது புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது.

தற்போது சுஷாந்தின் அப்பா கே.கே.சிங், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ரியா சக்ரபர்த்திக்கு எதிராக அளித்துள்ள புகாரின் அடிப்படையில் சிபிஐ விசாரணையைத் தொடங்கவுள்ளது. இது குறித்து சிபிஐ தரப்பும் உறுதி செய்துள்ளது.

முன்னதாக கே.கே.சிங் அளித்திருந்த புகாரை ஆதாரமாக வைத்து விசாரிக்க வேண்டும் என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தார். மத்திய அரசு தனது பரிந்துரையை ஏற்றுக்கொண்டதாகவும், சிபிஐ விசாரணைக்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இதனால் சிறப்பான விசாரணை நடைபெற்று நீதி கண்டுபிடிக்கப்படும் என்றும் நிதிஷ் குமார் ட்வீட் செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில், இந்த வழக்கை பாட்னாவிலிருந்து மும்பைக்கு மாற்ற வேண்டும் என்ற ரியா சக்ரபர்த்தியின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஹரிஷிகேஷ் ராயிடம் இந்த சிபிஐ விசாரணைக்கான மத்திய அரசின் ஒப்புதல் குறித்து ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ஆர்கே சிங் இந்த வழக்கு குறித்துப் பேசுகையில், "மும்பை காவல்துறை இந்த வழக்கில் எதுவும் செய்யவில்லை. அவர்கள் விளம்பரத்துக்காகச் சிலரை விசாரித்து வந்தனர். அவர்கள் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. யாரை விசாரிக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கவில்லை" என்று கூறினார். மும்பை காவல்துறை தரப்பில் இதுவரை இந்த வழக்கு குறித்து 56 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE