ஜி.வி.பிரகாஷைப் பாராட்டியுள்ள சூர்யா

By செய்திப்பிரிவு

'சூரரைப் போற்று' படத்தின் பாடல்கள் வெற்றிக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷைப் பாராட்டியுள்ளார் சூர்யா

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. ஏர்டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, பரேஷ் ராவல், கருணாஸ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் 'மாறா தீம்', 'வெய்யோன் சில்லி', 'காட்டுப் பயலே' உள்ளிட்ட 4 பாடல்கள் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. விரைவில் 3 பாடல்கள் வெளியாகியுள்ளது. இதில் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23-ம் தேதியன்று 'காட்டுப் பயலே' பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூலை 24-ம் தேதி 'காட்டுப் பயலே' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டது.

இந்தப் பாடல் யூடியூப் தளத்தில் கடந்த வாரத்துக்கான இந்திய அளவில் சிறந்த 100 பாடல்கள் பட்டியலில் 28-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து ஜி.வி.பிரகாஷ் ட்வீட் செய்திருந்தார். அவரைப் பாராட்டும் விதமாக சூர்யா கூறியிருப்பதாவது:

"ஒவ்வொரு முறையம் நீங்கள் உங்களை புதுப்பித்துக் கொள்வது முற்றிலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. 'சூரரைப் போற்று' படத்தை மேலும் விசேஷமாக்கியதற்கு நன்றி"
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், இதர 3 பாடல்களையும் வெளியிட்டு விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE