ஒரு நடிகரின் அங்க அசைவுகளும் பார்வைகளும் மெளனங்களும் முகபாவனைகளும் நமக்குள் வெடிச்சிரிப்பை உண்டுபண்ணும். வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிப்போம். மூச்சுமுட்டச் சிரிப்போம். கண்ணில் நீர் வரச் சிரிப்போம். அதேசமயம், அந்த மனிதரின் வாழ்வையும் வாழ்வின் சோகங்களையும் நினைத்து கண்ணீர் விட்டு அழுவோம். அவர்... உலகமே போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும் சார்லி சாப்ளின். நம்மூரிலும் அப்படியொரு நடிகர்... சொல்லப்போனால், சார்லி சாப்ளினைப் போலவே ஓடுவார். குதிப்பார். பரபரவென இருப்பார். இல்லாத சேட்டைகளையெல்லாம் பண்ணுவார். அவர் எதுவும் செய்வது இருக்கட்டும். அவரைப் பார்த்தாலே குபுக்கென்று சிரித்துவிடுவோம். அவர்... சந்திரபாபு.
தூத்துக்குடியில் பிறந்த திரைமுத்து சந்திரபாபு. இவரின் தந்தை சுதந்திரப் போராட்ட வீரர். இவரோ... திரையுலகிற்குள் வருவதற்கு அப்படியான போராட்டங்களைச் சந்தித்தார். சந்திரபாபு என்றதும் என்ன சொல்லுவோம். நடிகர் என்போம். காமெடி நடிகர் என்போம். கேரக்டர் நடிகர் என்போம். எல்லாவற்றுக்கும் மேலாக பிரமாதமாகப் பாடுவார் என்போம். ‘சந்திரபாபு, பிரமாதமாப் பாடுறாம்லே...’ என்று சொன்னதுதான் இவருக்குக் கிடைத்த முதல் பாராட்டு. பாடகராகத்தான் எல்லோராலும் அறியப்பட்டார் ஊரில்!
1927ம் ஆண்டு பிறந்த சந்திரபாபுவுக்கு 47ம் ஆண்டில் சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ’அமராவதி’ படத்தில் நடித்தார். உடனே சந்திரபாபுவின் வீட்டுக் கதவை வரிசை கட்டிக்கொண்டு வந்துவிடவில்லை வாய்ப்பு. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அறியப்பட்டார் சந்திரபாபு. ஆனாலும், மக்களின் மனங்களில் ‘அட..’ போடப்பட்டு சப்பளங்களால் போட்டு உட்கார்ந்துகொண்டார்.
அந்தக் காலத்தில், நடிப்பவர்களே பாடவும் செய்தார்கள். சந்திரபாபுவும் அப்படித்தான். ஆனால், அந்தக் குரலில் கொஞ்சம் அபின்... கொஞ்சம் ஆல்கஹால் என ஒருவித மயக்கத்தை ஏற்படுத்தியது. வசனங்களும் அப்படித்தான். குறிப்பாக, ரஜினி இன்றைக்கு படபடவெனப் பேசுகிறாரே... எஸ்.வி.ரங்காராவ் தடதடவென பேசுவாரே... அதேபோல், சந்திரபாபு டயலாக் டெலிவரி பண்ணுவதில் படு ஸ்பீடு.
லூஸ் மோகன், தேங்காய் சீனிவாசன், கமல்ஹாசன் என்றெல்லாம் மெட்ராஸ் பாஷையில் வெளுத்துவாங்குவார்கள். இதற்கெல்லாம் சித்தப்பா, பெரியப்பா... சந்திரபாபுதான். மொத்த தமிழ்த் திரையுலகிற்கும்... இந்த மெட்ராஸ் பாஷை அப்போது புதுசுதான். சந்திரபாபுவின் குரலில் சென்னை பாஷையைக் கேட்கவும் அவரின் பாடி லாங்வேஜைப் பார்க்கவும் இவர் நடித்த ஒவ்வொரு படத்தையும் சுவரில் பால் கணக்கு போல் கோடு கிழித்துக் கொண்டு, பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டார்கள்.
‘ரத்தக்கண்ணீர்’ படத்தில் எம்.ஆர்.ராதா, எம்.என்.ராஜம், எஸ்.எஸ்.ஆர். ஆகியோருடன் சந்திரபாபுவும் தனித்துத் தெரிந்தார். ‘மாமன் மகள்’ படத்திலும் ‘சகோதரி’ படத்திலும் இவரின் நடிப்பு பேசப்பட்டது. ‘சபாஷ் மீனா’வில் சிவாஜிக்கு நிகராக இவரும் பேசப்பட்டார்.
’பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே...’ என்று சந்திரபாபு சொன்ன காமெடி சங்கதிகள் சாகாவரம் பெற்றவை. ’குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே’ என்று பாடலின் மூலமாக கொஞ்சி விளையாடினார். ‘காதல் என்பது எதுவரை’ என்பதையும் ‘பொறந்தாலும் ஆம்பளயா பொறக்கக் கூடாது’ என்பதையும் ‘தனியா தவிக்கிற வயசு’வையும் ரசித்துச் சிரித்தார்கள். சிரித்து ரசித்தார்கள்.
வீணை பாலசந்தருக்காக ‘கல்யாணம்... ஆஹா கல்யாணம்’ என்ற பாடலைப் பாடியும் அசத்தினார் சந்திரபாபு. எம்ஜிஆருடன் இந்தப் பக்கம் நடித்தார். அந்தப் பக்கம் சிவாஜியுடன் நடித்தார். ‘பாதகாணிக்கை’ மாதிரியான படங்களில் ஜெமினியுடன் நடித்தார். சிவாஜி சிங்கிள் ரோல் பண்ணிய ‘ராஜா’ படத்தில், மூன்று வேடங்களில் நடித்து அசத்தினார்.
சந்திரபாபுவின் ஆங்கில பாணிதான் அவரின் பலம். அதுதான் அந்தக் காலத்தில் ரொம்பவே நம்மை ஈர்த்தது. ஆச்சரியப்படவைத்தது. தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று ஜெய்சங்கரைச் சொன்னது போல, தென்னகத்து சார்லிசாப்ளின் என்று சந்திரபாபுவை ரசிகர் உலகம் கொண்டாடியது.
ஆனால் என்ன... சார்லி சாப்ளின் போலவே பெருஞ்சோகங்களுக்கு வாக்கப்பட்டவர் என எல்லோராலும் அறியப்பட்டார். வாழ்க்கையில் நீச்சலடித்து முன்னேறியவருக்கு, மதுவில் இருந்து நீச்சலடித்து மேலெழமுடியாமல் போனது. கணக்கு வழக்கு பார்க்காமல், நேரங்காலம் பார்க்காமல் நடித்தவர்... ஒருகட்டத்தில் கணக்குவழக்கு இல்லாமல் கடன் சுமைக்கு ஆளானார். சம்பாதித்து காசு சேர்த்து இவர் கட்டிய பங்களாவைப் பற்றி கதைகதையாகச் சொல்வார்கள். கார் வீட்டுக்குள்ளேயே சென்று நிற்கும்படி கட்டினார் என்பார்கள். ஆனால் வாழ்க்கைக்கு தேவைப்படும் பிரேக்கையெல்லாம் தெரியாமல் விட்டார் என்பதுதான் பெருஞ்சோகம்.
திரைகளில் நடித்தவர்தான். இவரின் மணவாழ்க்கை, திரைப்படமாகவே எடுக்கும் அளவுக்கு திடுக்கிடும் திருப்பங்கள் கொண்டதுதான் கொடுமை. சந்திரபாபுவின் ஆட்டம்... தனி ரகம். புது தினுசு. அவரின் குரல்... எந்த இலக்கணங்களுக்குள்ளும் கட்டுப்படாத மாயக்குரல். இப்படி தனித்து, தினுசுடன், மாயமாகிப் போன வாழ்க்கைக்குள் வசமாகாமால், தன்னையே இழந்த சந்திரபாபு எனும் கலைஞன்... உன்னதப் பிறவி.
‘நான் ஒரு முட்டாளுங்க...’ என்ற பாடலும் ‘ஒண்ணுமே புரியல உலகத்திலே’... பாடலும், ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை’ என்கிற பாடலும் அந்தந்தப் படங்களின் கேரக்டர்களுக்காக, சந்திரபாபுவுக்காக எழுதப்பட்ட பாடல்கள். அவரே பாடிய பாடல்கள்.
இந்தப் பாடல்கள் அவருக்கே பொருந்திப்போனதுதான்... ஆச்சரியம்.
சாகாவரக் கலைஞன் சந்திரபாபுவுக்கு இன்று ஆகஸ்ட் 5ம் தேதி பிறந்தநாள். 93வது பிறந்தநாள்.
உன்னதக் கலைஞனைப் போற்றுவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago