ரஜினிக்கு ‘பில்லா’; கமலுக்கு ‘வாழ்வே மாயம்’; ஒப்பற்ற படங்களைத் தந்த கே.பாலாஜி

By செய்திப்பிரிவு

நடிகர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமெல்லாம் இருந்தால்தான் அவர்கள் ஜெயிப்பார்கள் என்றெல்லாம் இல்லை. அப்படி ரசிகர் கூட்டமெல்லாம் இல்லாமலும் கூட மக்கள் மனங்களில் தனித்ததான இடத்தை அடையமுடியும்.

அதேபோல், தயாரிப்பு நிறுவனம் என்பது மக்களுக்குப் பிடித்த படங்களைத் தரலாம். ஆனால் தயாரிப்பு நிறுவனமும் தயாரிப்பாளரும் கொண்டு, அந்தப் படத்தின் பூஜையின் போதே மிகப்பெரிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வருவதும் நடந்திருக்கிறது.

இப்படியான இரண்டுக்குமான உதாரணம்... கே.பாலாஜி. நடிகராக, குணச்சித்திர நடிகராக, கொடூர வில்லனாகவெல்லாம் வந்தவர், பின்னர் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.

’நரசுஸ் ஸ்டூடியோ’வில் தயாரிப்பு நிர்வாகியாக தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார் கே.பாலாஜி. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தார். எஸ்.எஸ்.வாசன் தயாரித்த ஜெமினியின் ‘அவ்வையார்’ படம், இன்றைக்கும் மறக்கமுடியாத படம். இந்தப் படம்தான் இவர் நடித்த முதல் படம். பின்னர், ’மனமுள்ள மணதாரம்’ உள்ளிட்ட ஒருசில படங்களில் நாயகனாகவும் நடித்தார். ஸ்ரீதரின் ‘போலீஸ்காரன் மகள்’, பீம்சிங்கின் ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘பலே பாண்டியா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். முக்கியமாக, ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் சிங்கம்பட்டி ஜமீன்தாரை அவர் மனம் திருந்துவதையும் மறக்கவே முடியாது. 'பலே பாண்டியா’வில், ‘மாப்ளே... மாமா.. மாப்ளே... மாமா’ பாட்டுக்கு, மாமா எம்.ஆர்.ராதாவுக்கும் மாப்ளே சிவாஜிக்கும் நடுவே இருந்துகொண்டு சமாளித்து அதகளம் பண்ணியிருப்பார் பாலாஜி.

‘படித்தால் மட்டும் போதுமா’வில் ‘பொன்னொன்று கண்டேன்’ பாடலில் சிவாஜியும் பாலாஜியும் நீந்திய படியே பாடுவார்கள். நம்மையும் நீச்சல் பழக வைத்துவிடுவார்கள்.

இதையடுத்து, தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்தார். ஜெமினி கணேசனை வைத்து ‘மணமுள்ள மறுதாரம்’ என்ற படத்தைத் தயாரித்தார். அடுத்தடுத்து படங்கள் தயாரிப்பதில் முனைந்தார். வேற்றுமொழிப் படங்களை ரீமேக் செய்வதில் வல்லவர் என்று பேரெடுத்தார்.

சிவாஜிக்கு சினிமாவுக்குள்ளேயும் மிக முக்கிய ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள் என்பார்கள். அவர்களில் கே.பாலாஜியும் ஒருவர். சொல்லப்போனால், சிவாஜியின் நல்ல நண்பரும் கூட! ’என்ன... திவான் பகதூர்’ என்று செல்லமாக பாலாஜியை அழைப்பார் சிவாஜி.

அதேபோல், நாகேஷின் இனிய நண்பர். ஆரம்பகட்டத்தில், நாகேஷை தன் வீட்டில் ஒரு அறையில் தங்கவைத்து எல்லா உதவிகளையும் செய்ததாகச் சொல்கிறார்கள். இதை பல மேடைகளில் நன்றியுடன் சொல்லியிருக்கிறார் நாகேஷ். அதேபோல, நாகேஷுக்கு தன் படங்களில் தொடர்ந்து கேரக்டர்கள் கொடுத்துக் கொண்டே இருந்தார். இருவரும் வாடா போடா நண்பர்கள்.

‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘நீதி, ‘என் மகன்’, ’தீபம்’, ‘தியாகம்’ என்று வரிசையாக படங்களை எடுத்தார். வேற்றுமொழிகளில் வந்த சிறந்த கதையம்சம் உள்ள படங்களை ரீமேக் செய்தார். கமலை வைத்தும் ரஜினியை வைத்தும் பல நல்ல வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

ரஜினியின் ஆரம்ப கால மார்க்கெட் வேல்யூவை, லிஃப்ட்டில் ஏற்றிவிட்டதில் பாலாஜிக்கு முக்கியப் பங்கு உண்டு. ‘பில்லா’ அதில் முக்கியத்துவம் வாய்ந்த படம். ‘தீ’ இன்னொரு அதிரிபுதிரி. கமல் அந்தக் காலத்தில் மெட்ராஸ் பாஷையில் கலக்கிய ‘சவால்’, இந்தியில் அமிதாப் நடித்த ‘தோஸ்தானா’வை தமிழில் பண்ணிய ‘சட்டம்’ என்று ஹிட்டுகளைக் கொடுத்தார்.

பின்னர், மோகன், பூர்ணிமா பாக்யராஜை வைத்து, இவர் எடுத்த ‘விதி’ படம் மிகப்பெரிய ரிக்கார்டை ஏற்படுத்தியது. ’திருவிளையாடல்’ படத்தின் ஒலிச்சித்திரம் எப்படி தெருவெல்லாம், திருவிழாக்களிலெல்லாம் ஒலித்ததோ... ’விதி’ படத்தின் ஒலிசித்திரம்... மக்களுக்கு மனப்பாடமாகவே ஆகிப்போனது. சுஜாதாவுக்கும் ஜெய்சங்கருக்கும் முக்கியமான படம். மோகனுக்கும் பூர்ணிமாவுக்கும் முக்கியமான படம். முக்கியமாக, ரசிகர்களுக்கு மிக மிக முக்கியமான படம்.

ரஜினிக்கு மார்க்கெட் வேல்யூவை தூக்கி உயரத்தில் வைத்த படமாக ‘பில்லா’ படம் அமைந்தது. சிவாஜியை வைத்து மட்டுமே ‘சுஜாதா சினி ஆர்ட்ஸ்’ தயாரிப்பில், ‘சுரேஷ் ஆர்ட்ஸ்’ பேனரில் 18க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்திருக்கிறார் கே.பாலாஜி.
படத்தை ஆரம்பிக்கும் போதே ரிலீஸ் தேதியையும் முடிவு செய்து அதை நோக்கி படக்குழுவினர் செல்ல வழிவகைகள் செய்து தருவதில் கில்லாடி தயாரிப்பாளர் கே.பாலாஜி. அதனால்தான் வருடத்துக்கு இரண்டு மூன்று படங்களெல்லாம் தயாரித்தார். ரசிகர்களுக்குப் பிடித்த படமாகவும் வழங்கினார். வசூல் ரீதியாகவும் படங்கள் கொடுத்தார். நல்ல தரமான படங்களாகவும் வழங்கினார்.

ஜனவரி 26ம் தேதி கே.பாலாஜியின் திருமண நாள். எனவே அந்தநாளில், படம் ரிலீஸ் செய்யவேண்டும் என விரும்பினார். இவரின் முக்கால்வாசி படங்கள், ஜனவரி 26ம் தேதியன்று வெளியானவை.

சுஜாதா சினி ஆர்ட்ஸ் லோகோ வந்தாலும், சுரேஷ் ஆர்ட்ஸ் என்று லோகோ வந்தாலும் அதையடுத்து கம்பீரமான சுழற்நாற்காலியில் இருந்து திரும்பிச் சிரிப்பார் கே.பாலாஜி. ‘அட... பாலாஜி படமா... அப்போ பிரமாதமான படமாத்தான் இருக்கும்’ என்று நம்பிக்கையுடன் படம் பார்க்க முதல் நாளே ஓடிவந்தார்கள் ரசிகர்கள். அப்படியொரு பேரைச் சம்பாதித்த தயாரிப்பாளர்களில் பாலாஜியும் முக்கியமானவர்.

‘நல்ல கதை இருந்தால் போதும். அது படத்தை ஓடச் செய்துவிடும்’ என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தார் பாலாஜி. அதேபோல், கதைக்குத் தேவையெனில் எத்தனை பிரமாண்டமான செலவுகளைச் செய்வதிலும் தயக்கம் காட்டமாட்டார்.சொல்லப்போனால், கே.பாலாஜியின் படங்களில் விதம் விதமான உயர் ரகமான கார்களைப் பார்க்கலாம். ஆடம்பர பங்களா செட் மிரட்டும். சிகரெட் லைட்டரில் கூட ரிச்னெஸ் இருக்கும்.

கே.பாலாஜியின் படங்களுக்கு, இவர்தான் இசையமைப்பாளர் என்றெல்லாம் வைத்துக்கொள்ளாமல், ஆரம்ப கால படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதனைப் பயன்படுத்தினார். சங்கர் கணேஷ் இசையமைத்தார். இளையராஜா என்று பலரைக் கொண்டும் இசையமைக்கச் செய்தார்.

கே.பாலாஜியின் இவரின் ‘வாழ்வேமாயம்’, ‘சட்டம்’ படங்களுக்கு கங்கை அமரன் இசையமைத்தார் என்பதும் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது என்பதும் எவரும் மறந்துவிடவே முடியாதது.

இப்படி மறக்கவே முடியாத படங்களைக் கொடுத்த தயாரிப்பாளராக தனித்துவத்துடன் திகழ்கிறார் கே.பாலாஜி.
சம்பள பாக்கி வைக்காதவர், யாருக்கு என்ன சம்பளம் எவ்வளவு சம்பளம் என்பதையெல்லாம் யார் மனமும் நோகாமல் தருபவர் என்றெல்லாம் கே.பாலாஜியை இன்றைக்கும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

1934ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி பிறந்தார் கே.பாலாஜி. இன்று பாலாஜியின் பிறந்தநாள். 86வது பிறந்தநாள்.
அந்த உன்னத நடிகரை, அற்புதத் தயாரிப்பாளரைப் போற்றுவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE