மீண்டும் இசை ஆல்பம் உருவாக்கியுள்ள ஹிப் ஹாப் ஆதி

By செய்திப்பிரிவு

'நான் ஒரு ஏலியன்' என்ற பெயரில் புதிய ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார் ஹிப் ஹாப் ஆதி.

தமிழில் வெளியான முதல் ஹிப் ஹாப் ஆல்பம் 'ஹிப் ஹாப் தமிழன்'. இந்த ஆல்பத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் பிரபலமானவர் 'ஹிப் ஹாப்' ஆதி. தமிழ்த் திரையுலகில் பாடகராக அறிமுகமாகி பின்பு இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என வளர்ந்துள்ளார்.

'வணக்கம் சென்னை', 'எதிர் நீச்சல்', 'கத்தி' உள்ளிட்ட படங்களில் பாடியுள்ள 'ஹிப் ஹாப்' ஆதி, 'ஆம்பள', 'இன்று நேற்று நாளை', 'தனி ஒருவன்', 'இமைக்கா நொடிகள்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இயக்குநராகவும் நடிகராகவும் 'மீசைய முறுக்கு' படத்தில் அறிமுகமானார். பின்பு 'நட்பே துணை', 'நான் சிரித்தால்' ஆகிய படங்களிலும் நாயகனாக நடித்துள்ளார்.

நடிப்பு, இயக்கம், இசை எனப் பணிபுரிந்து வந்ததால் தனியாக ஆல்பங்கள் எதையும் உருவாக்காமல் இருந்தார் 'ஹிப் ஹாப்' ஆதி. தற்போது இந்தக் கரோனா ஊரடங்கில் புதிதாக ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

'நான் ஒரு ஏலியன்' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்தின் உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின வெளியீடாக இந்த ஆல்பம் வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE