உலகைக் காக்கும் சூப்பர் ஹீரோ குடும்பம்!- நெட்ஃப்ளிக்ஸில் கலக்கும் ‘அம்ப்ரெல்லா அகாடமி’

By செய்திப்பிரிவு

சூப்பர் ஹீரோக்கள், காலப் பயணம், நகைச்சுவை கலந்த உறவுகளின் கதைகள் போன்ற ஜானர்களுக்கு ஹாலிவுட்டில் எப்போதுமே வரவேற்பு உண்டு. இந்த அனைத்து ஜானர்களையும் ஒன்றாகக் கலந்த கதை என்றால் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஆம், அப்படி ஒரு விறுவிறுப்பான தொடராக நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது ‘அம்ப்ரெல்லா அகாடமி’.

கெரார்ட் வே என்ற பெண் எழுத்தாளர் எழுதிய ‘அம்ப்ரெல்லா அகாடமி’ (2007) எனும் காமிக்ஸ் புத்தகத்தைத் தழுவி, இந்தத் தொடரை உருவாக்கியிருக்கிறார்கள் ஸ்டீவ் ப்ளாக்மேன் மற்றும் ஜெரமி ஸ்லேட்டர். இதன் முதல் சீஸன் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. தற்போது, சில தினங்களுக்கு முன்பு இத்தொடரின் இரண்டாம் சீஸன் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ஒரே நாளில் உருவாகும் அதிநாயகர்கள்

கதைப்படி, 1989 அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுக்க 43 பெண்கள் ஒரே சமயத்தில் குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 43 பெண்களும் செப்டம்பர் 30 வரை கருவுற்றிருக்க மாட்டார்கள். விளக்க முடியாத ஒரு காரணத்தால் அவர்கள் ஒரே நாளில் கர்ப்பமுற்று அன்றைக்கே குழந்தையையும் பெற்றெடுப்பார்கள். இந்த 43 குழந்தைகளுக்கும் ஏதோ மர்ம சக்தி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் செல்வந்தர் சர். ரெஜினால்ட் ஹார்க்ரீவ்ஸ் அதில் ஏழு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பார். அவர்களுக்குக் கடுமையான பயிற்சிகள் கொடுத்து, குற்றங்களை எதிர்த்துப் போராடும் சூப்பர் ஹீரோ குழந்தைகளாக மாற்றி ‘அம்ப்ரெல்லா அகாடமி’ என்ற அமைப்பை உருவாக்குவார்.

அண்ணன், தங்கைகளாக வளர்க்கப்படும் இந்த ஏழு சிறுவர்களும் காலப்போக்கில் வெவ்வேறு பாதையில் பிரிந்து போய்விடுவார்கள். சர். ரெஜினால்ட் மரணமடைந்த தகவல் கிடைத்த பின்னர்தான் மீண்டும் ‘அம்ப்ரெல்லா அகாடமி’ ஒன்றுகூடும். அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சந்தேகம் எழ விசாரணையைத் தொடங்குவார்கள்.

இதற்கிடையே பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போன இவர்களின் ஐந்தாவது சகோதரன் திடீரென்று காலப்பயணம் மூலம் திரும்பிவந்து, “உலகம் அழிய இன்னும் எட்டு நாட்களே இருக்கின்றன” என்று எச்சரிப்பான். ‘அம்ப்ரெல்லா அகாடமி’ உலகத்தைக் காப்பாற்றியதா, தங்கள் வளர்ப்புத் தந்தையைப் பற்றிய மர்மங்களை அறிந்துகொண்டதா என்பதை இரண்டு சீஸன்களில் படு சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

தரமான 20 மணி நேரம்

இதுவரை வந்த இரண்டு சீஸன்களும் தலா பத்து எபிசோடுகளுடன் மொத்தம் இருபது எபிசோடுகளாக வெளியாகியுள்ளது. ஒவ்வொரு எபிசோடும் தோராயமாக ஒரு மணி நேரம் ஓடக்கூடியது. ஆக மொத்தம் ‘அம்ப்ரெல்லா அகாடமி’யின் மொத்த 20 மணி நேரமும் சலிப்பு தட்டாத திரைக்கதையால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த உடன்பிறவா சகோதர - சகோதரிகள் தங்கள் குடும்பத்தைப் பற்றிய பல ரகசியங்களை அறிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், கடந்த காலத்திற்கு மாறி மாறிப் பயணிப்பார்கள். அதன் தொடர்ச்சியாக நிகழ்காலத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தையும் இவர்கள் சந்திக்கும் தருவாயில் இரண்டாம் சீஸன் முடிந்துள்ளது. அதனால் மூன்றாம் சீஸனில் மேலும் சுவாரசியமான கதைக்களம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, இதுவரை சாதாரண மனிதர்களுடன் போராடிவந்த இவர்கள், இனி வரும் சீஸன்களில் தங்களைப் போல் சூப்பர் பவர் கொண்ட வலிமையான எதிரிகளுடன் போராடவுள்ளார்கள் என்பதும் அடுத்த சீஸனுக்கான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. ஆனால், கரோனா தொற்று காரணமாக உலகமெங்கும் வெவ்வேறு விதங்களில் பொதுமுடக்கம் அமலில் இருப்பதால், இதன் மூன்றாம் சீஸன் சற்று தாமதமாகவே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனாவை வென்று உலகைக் காப்பாற்ற ஒரு சூப்பர் பவர் வருவதுபோல் இனி கதைகள் உருவாக்கப்பட்டால்கூட அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை!

- க.விக்னேஷ்வரன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE