நாயகனாக விளம்பரம்: அதிருப்தியில் விஜய் சேதுபதி

By செய்திப்பிரிவு

கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்த மலையாளப் படத்தின் தமிழ் டப்பிங்கை நேரடித் தமிழ்ப் படம் போன்று விளம்பரப்படுத்துவதால் விஜய் சேதுபதி அதிருப்தியில் உள்ளார்.

தமிழில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு உள்ளிட்ட இதர மொழிகளிலும் வரும் நல்ல கதைகளில் நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'சைரா நரசிம்ம ரெட்டி', 'உபேனா' ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் ஜெயராம் நடித்த 'மார்க்கோனி மத்தாய்' படத்தில் கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2019-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி வெளியான 'மார்க்கோனி மத்தாய்' படத்தை சனில் இயக்கியிருந்தார். ஜெயராம், ஆத்மியா ராஜன், பூர்ணா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருந்த, இந்தப் படத்தில் சிறு கதாபாத்திரத்தில்தான் விஜய் சேதுபதி நடித்திருந்தார். சத்யம் வீடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தற்போது விஜய் சேதுபதி நடித்திருப்பதால், இந்தப் படத்தின் தமிழ் டப்பிங் உரிமையைக் கைப்பற்றி இருக்கிறார்கள். இங்கு விஜய் சேதுபதி நடித்துள்ள புதிய தமிழ்ப் படம் என்பது போல் விளம்பரப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதனால் விஜய் சேதுபதி கடும் அதிருப்தியில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். மேலும், போஸ்டர்களில் விஜய் சேதுபதியின் படத்தைத் தவிர வேறு யாருடைய படத்தையும் படக்குழு வெளியிடாததுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE