'எனக்கும் ஏதாவது வித்தியாசமாக யோசித்து வைங்க': 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குநரிடம் ரஜினி

By செய்திப்பிரிவு

எனக்கும் ஏதாவது வித்தியாசமாக யோசித்து வைங்க என்று 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தைப் பாராட்டிப் பேசும் போது இயக்குநரிடம் தெரிவித்துள்ளார் ரஜினி

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. பிப்ரவரி 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. வயகாம் 18 நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது மட்டுமன்றி, பல்வேறு முன்னணி நடிகர்களும் இந்தப் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினார்கள். இந்தப் படத்தின் தொடக்கத்திலேயே ரஜினிக்கு நன்றி தெரிவித்திருப்பார் இயக்குநர் தேசிங் பெரியசாமி. அந்த அளவுக்குத் தீவிரமான ரஜினி ரசிகர்.

தற்போது 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் தேசிங் பெரியசாமியை தொலைபேசி வாயிலாகப் பாராட்டியிருக்கிறார் ரஜினி. இருவரும் பேசிய ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது. அவர்களுக்குள் நடந்த உரையாடல் அப்படியே.

ரஜினி: நான் ரஜினி பேசுறேன் பெரியசாமி

தேசிங் பெரியசாமி: சார். நல்லாயிருக்கீங்களா சார்?

ரஜினி: நல்லா இருக்கேன். நேற்று தான் உங்க படம் பார்த்தேன்.

தேசிங் பெரியசாமி: சொல்லுங்க சார்

ரஜினி: சூப்பர். அருமை

தேசிங் பெரியசாமி: ரொம்ப நன்றி சார்.

ரஜினி: எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆகையால், நிறைய தெரிந்துக் கொண்டேன்.

தேசிங் பெரியசாமி: நன்றி சார்.

ரஜினி: ரொம்ப அருமையான படம். மன்னிக்கணும், ரொம்ப நாள் கழித்து பார்த்திருக்கேன்.

தேசிங் பெரியசாமி: பரவாயில்லை சார்.

ரஜினி: ரொம்ப தாமதமாகச் சொல்கிறேன். வாழ்த்துகள். உங்களுக்குப் பெரிய எதிர்காலம் இருக்கு பெரியசாமி. ரொம்ப அருமை, ரொம்ப அருமை

தேசிங் பெரியசாமி: ரொம்ப நன்றி சார்.

ரஜினி: எனக்கு ஏதாவது யோசித்து வையுங்கள்.

தேசிங் பெரியசாமி: அய்யோ சார். ரொம்ப நன்றி.

ரஜினி: உண்மையில் தான் சொல்றேன். ஏதேனும் வித்தியாசமாக யோசித்து வையுங்கள்.

தேசிங் பெரியசாமி: ரொம்ப நன்றி. கண்டிப்பாக சார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE