பிக் பாஸ் ஒப்பந்த நிபந்தனைகளைத் திருத்தினால் போதுமானது: ஓவியா

பிக் பாஸ் ஒப்பந்தத்த நிபந்தனைகளைத் திருத்தம் செய்தால் போதுமானது என்று ஓவியா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழில் 2017-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கமல் தொகுத்து வழங்கினார். 'பிக் பாஸ்' சீசன்-1 நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஓவியா.

சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பதிவில், "பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யவேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா?" என்ற கேள்வியை எழுப்பி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அந்தப் பதிவுக்கு வரும் ஏன், எதற்கு உள்ளிட்ட அனைத்துக் கேள்விகளுக்குமே பதிலளித்து வருகிறார் ஓவியா.

அந்தப் பதிவுக்கான பின்னூட்டத்தில் ரசிகர் ஒருவர், "இப்போது இந்த சர்ச்சை வரக் காரணம் என்ன? இது இப்போதைய சர்ச்சையா அல்லது 2017-ல் எழுந்ததன் நீட்சியா?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு "தமிழகத்திலும் ஒரு சுஷாந்த் சிங்கை நான் பார்க்க விரும்பவில்லை. அது என் தவறே" என்று பதிலளித்தார்.

அதனைத் தொடர்ந்து ரசிகர் ஒருவர், "இது சுஷாந்த் தொடர்புடையதல்ல, எனவே நாம் நமது 10 நிமிட சுய விளம்பரத்துக்காக சுஷாந்த் பெயரை உபயோகிப்பதை நிறுத்துவோம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தேவையுள்ளது. அதற்காக பிக் பாஸ் ஒப்பந்த நிபந்தனைகளைத் திருத்த வேண்டியுள்ளது என்று நீங்கள் உண்மையிலேயே நினைத்தால் சட்ட ரீதியாக அது நிறைவேற வழிபாருங்கள்.

உங்களிடம் இதற்கான பணம் இல்லாமல் இல்லை. இதற்கான நல்ல ரீச்சும் உங்களிடம் உள்ளது. இதை விடுத்து சமூக வலைதளங்களில் உட்கார்ந்துகொண்டு ஏன் காட்டுக்கூச்சல் போட வேண்டும்?" என்று ஓவியாவிடம் கேள்வி எழுப்பினார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக ஓவியா கூறியிருப்பதாவது:

"இது தீர்வல்ல. உங்களுக்கும் எனக்குமே இது தெரியும். நானும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். நான் அவ்வளவுதான், அடைக்கப்பட்டு விட்டேன். மேலும், செல்வாக்கு மிகுந்தவர்களுக்கு எதிராக இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற முடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. என்னுடைய அன்பான வேண்டுகோளை அவர்கள் ஏற்று ஒப்பந்த நிபந்தனைகளில் திருத்தம் மேற்கொண்டால் போதுமானது".

இவ்வாறு ஓவியா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE