'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்துக்கு ரஜினி பாராட்டு: இயக்குநர் நெகிழ்ச்சி

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தைப் பார்த்துவிட்டு, அதன் இயக்குநர் தேசிங் பெரியசாமியை தொலைபேசி வாயிலாக ரஜினி பாராட்டியுள்ளார்.

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. பிப்ரவரி 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. வயகாம் 18 நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது மட்டுமன்றி, பல்வேறு முன்னணி நடிகர்களும் இந்தப் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினார்கள். இந்தப் படத்தின் தொடக்கத்திலேயே ரஜினிக்கு நன்றி தெரிவித்திருப்பார் இயக்குநர் தேசிங் பெரியசாமி. அந்த அளவுக்குத் தீவிரமான ரஜினி ரசிகர்.

தற்போது 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் தேசிங் பெரியசாமியை தொலைபேசி வாயிலாகப் பாராட்டியிருக்கிறார் ரஜினி.

இது தொடர்பாக தேசிங்கிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

" ‘நேற்றுதான் படம் பார்த்தேன். படம் ரொம்ப நல்ல பண்ணியிருக்கீங்க. உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு’ என்று சொன்னார் ரஜினி சார். இதை அவருடைய ஸ்டைலில் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வாழ்த்துக்காகத்தான் இத்தனை நாளாகக் காத்துக்கிட்டு இருந்தேன். அது நடந்துவிட்டது.

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் வெற்றி இப்போதுதான் முழுமையாகி இருக்கிறது. வெற்றி, வாழ்த்து என இருந்தாலுமே, எப்போதுமே ஒரு குறை இருப்பதாகவே தெரியும். அந்தக் குறை என்பது ரஜினி சாருடைய பாராட்டினால் முழுமை பெற்றது. இதற்காகத்தான் வந்தேன், உழைத்தேன். அது நடந்துவிட்டது".

இவ்வாறு இயக்குநர் தேசிங் பெரியசாமி தெரிவித்தார்.

"உங்களுடைய அடுத்த படம் எப்போது" என்ற கேள்விக்கு, தேசிங் பெரியசாமி, "கதை எழுதிட்டு இருக்கேன். கரோனா ஊரடங்கு எல்லாம் முடிந்தவுடன், கொஞ்சம் பயணித்துக் கதையை எழுதி முடிக்க வேண்டும். அந்தக் கதைக்குப் பொருத்தமான ஒரு பெரிய ஹீரோவை வைத்துப் பண்ணலாம் என்று திட்டமிட்டு இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE