பாலிவுட்டில் திறமை மிக்க கலைஞனை வளர விடாமல் தடுப்பது கண்டிக்கத்தக்கது: கே.டி.குஞ்சுமோன்

திறமைமிக்க கலைஞனை பாலிவுட்டில் வளர விடாமல் தடுப்பது கண்டிக்கத்தக்கது என்று கே.டி.குஞ்சுமோன் தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. வாரிசு அரசியல் தொடர்பாக அனைத்துத் திரையுலகிலிருந்தும் முன்னணி நடிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு, 'தில் பெச்சாரா' படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் ஏ.ஆ.ரஹ்மான் "நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால், என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்தார். இது பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது.

தற்போது பலரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டி என்னை மிகவும் வேதனை அடையச் செய்தது. ரஹ்மான் பின்னால் போகக் கூடாது என்று பலரும் பாலிவுட் சினிமாவில் பிரச்சாரம் செய்வதாகவும், அப்போதுதான் ஏன் தன்னைத் தேடி நல்ல படங்கள் வருவதில்லை என்றும் தெரியவந்தது என்று ரஹ்மான் கூறியிருந்தார்.

என்னைப் பொறுத்தவரை ரஹ்மான் எனது சொந்த சகோதரனுக்கு நிகர். ரஹ்மானின் வளர்ச்சியில் மிகவும் பெருமை கொள்பவன் நான். அதற்கான உரிமையும் எனக்கு உண்டு. 27 வருடத்திற்கு முன் 1993-ல் நான் தயாரித்த 'ஜென்டில்மேன்' என்ற பிரம்மாண்டப் படத்தின் மூலம், அப்படத்தின் பாடல் வாயிலாகத்தான் ரஹ்மான் உலகப் புகழ் பெற்றார்.

அதன் பின் தொடர்ச்சியாக எனது படங்களான 'காதலன்', 'காதல் தேசம்', 'ரட்சகன்' போன்ற படங்களும் அதன் பாடல்களும் ரஹ்மானின் புகழுக்கும் வளர்ச்சிக்கும் தூண்டுதலானது. அதன் பிறகு பாலிவுட்டிலும் ஹாலிவுட்டிலும் சென்று தனது சொந்த முயற்சியாலும் திறமையாலும் மிகப்பெரிய வெகுமதியான ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் என்ற திறமை மிக்க கலைஞனை வளர விடாமல் பாலிவுட்டில் சிலர் முயன்றார்கள் என்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நான் அவர்களது இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

விருப்பமுள்ள கலைஞர்களை வைத்துப் படம் எடுப்பதும் எடுக்காமல் இருப்பதும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களின் விருப்பமும் உரிமையுமாகும். ஆனால் நல்ல கலைஞர்களைப் புறக்கணிப்பதும் ஏளனம் செய்வதும், அவர்களது வளர்ச்சியைத் தடுப்பதும் நல்ல செயல் அல்ல.

தனிப்பட்ட முறையிலும் குடும்ப ரீதியாகவும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் எனக்கு மிகவும் நெருங்கிய நட்பு உள்ளது. அவரது திருமண வேளையில், நான்தான் அவருக்குத் தலையில் டர்பன் அணிவித்து வாழ்த்தினேன். இன்றும் உலகெங்கும் அவர் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் என் படத்திலுள்ள 'ஒட்டகத்தே கட்டிக்கோ', 'சிக்கு புக்கு ரயிலே', 'முக்கால முக்காபுலா', 'முஸ்தபா முஸ்தபா', 'ஊர்வசி ... ஊர்வசி' போன்ற பாடல்கள் இசைத்து ரசிகர்களை ஈர்க்கும்போது நான் பெருமை கொள்வதுண்டு.

தன்னை அணுக எல்லோருக்கும் தன் வாசலைத் திறந்து வைத்திருக்கும் ரஹ்மானைப் பற்றி இப்படியொரு செய்தி பரவுவதில் எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானை இப்படி அவமானப்படுத்திப் புறக்கணிப்பதில் பிறரை விட எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் கோடிக்கணக்கில் உலகெங்குமுள்ள சினிமா ரசிகர்களால் போற்றப்படும் அவர் இன்னும் வெகு தூரம் பயணித்து நிறைய வெகுமதிகளும் புகழும் அடைய வேண்டும் என்பதே எனது ஆசையும் பிரார்த்தனையும்".

இவ்வாறு தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE