சுஷாந்த் தற்கொலை விவகாரம்: தன் மீதான விசாரணைக்கு தடை கோரி ரியா உச்சநீதிமன்றத்தில் மனு

By செய்திப்பிரிவு

சுஷாந்த் தற்கொலை விவகாரம்: தன் மீதான புகாரை மும்பை காவல்துறைக்கு மாற்றக் கோரி ரியா சக்ரவர்த்தி உச்சநீதிமன்றத்தில் மனு

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் சுஷாந்த் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சுஷாந்த்தின் தந்தை, நடிகை கங்கணா, பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி, சுஷாந்த்தின் காதலி என்று அறியப்படும் ரியா சக்ரவர்த்தி உள்ளிட்ட பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுஷாந்த்தின் தந்தை கே.கே.சிங் பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் ரியா சக்ரவர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் அளித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரியா சக்ரபோர்த்தி சுஷாந்த் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

கே.கே. சிங் தனது புகாரில் கடந்த 2019ஆம் ஆண்டு சுஷாந்த் பாலிவுட்டில் நல்ல நிலையில் இருக்கும்போது ரியா சகர்போர்த்தியின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் என் மகனிடம் அவர் வாழ்ந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக அவரிடம் கூறி அவரை அந்த வீட்டை காலி செய்யுமாறும் கூறியதாகவும், இது அவரது மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சுஷாந்த் வங்கிக் கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் அவருக்கு தொடர்பே இல்லாத ஆட்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், சுஷாந்த்தின் லேப்டாப், பணம், கிரெடிட் கார்டுகள், பின் நம்பர் ஆகியவற்றை ரியா குடும்பத்தினர் திருடிவிட்டதாகவும் கே.கே. சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரையடுத்து ரியா சக்ரவர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது ராஜீவ் நகர் போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.

இந்நிலையில் தனது மீதான புகாரை பாட்னா காவல்துறையிடமிருந்து மும்பை காவல்துறைக்கு மாற்றக் கோரி ரியா சக்ரவர்த்தி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

மேலும் மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து உத்தரவு வழங்கும் வரை சுஷாந்த் தந்தை கொடுத்த புகார் மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE