தயாரிப்பாளர்களுக்கு இடையே குழு அரசியல்: 'மாநாடு' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

தயாரிப்பாளர்களிடையே குழு அரசியல் இருக்கிறது என்று 'மாநாடு' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குற்றம் சாட்டியுள்ளார்.

சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. வாரிசு அரசியல் தொடர்பாக அனைத்துத் திரையுலகிலிருந்தும் முன்னணி நடிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மான் வைத்த குற்றச்சாட்டும் பெரும் விவாதமாக உருவெடுத்தது.

இதனிடையே தமிழ்த் திரையுலகில் நிலவரம் குறித்து நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டியின் ட்வீட்டுக்கு சாந்தனு அளித்த பதில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. "வாரிசு அரசியல் இங்கேயும் உள்ளது. அதே குழு அரசியல் நபர்கள் தான் நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார்கள். தரத்தைப் பராமரிக்க அவர்கள் ஒரு சிலரை ஆதரிக்கிறார்கள், மற்றவர்களை தங்கள் தரத்தை அதிகரிக்க அனுமதிக்க மாட்டார்கள்" என்று சாந்தனு தனது ட்வீட்டில் குறிப்பிட்டார்.

இந்தப் பதிவை வைத்து தொலைக்காட்சிகளில் விவாதம் எல்லாம் நடைபெற்றது. தற்போது 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ஃபேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"பாலிவுட்டில் மட்டுமல்ல குழு அரசியல் இங்கும் உள்ளது. நடிகர்களிடம் உள்ளதோ இல்லையோ ஒருசில தயாரிப்பாளர்களிடம் உள்ளது. அவர்களால் தான் மிகப் பழமையான தயாரிப்பாளர்களும் ஒதுங்கியிருப்பதுவும் அதனால்தான்.

தான் மட்டுமே வாழவேண்டும் என நினைக்கும் அந்த பிரபல தயாரிப்பாளர் தன் பலத்தால் சில பல தயாரிப்பாளர்களை உடன் சேர்ந்துகொண்டு பலரை வாழவிடாமல் கெடுத்துக்கொண்டிருக்கிறார்.

ஹீரோக்களுக்கு போன் பண்ணிக் கெடுத்துவிடுவதும், ஃபைனான்சியர்களை கலைத்துவிடுவதும், படத்தைப் பற்றி கேவலமாகக் கிளப்பிவிட்டு விநியோகஸ்தர்களிடம் பீதியை உருவாக்குவதுமாக முன்னால் விட்டு பின்னால் செய்யும் வேலையை வெற்றிகரமாகச் செய்துவருகிறார்.

அதற்கு சில தயாரிப்பாளர்கள் உடன் பட்டு நிற்பதுதான் வேதனை. வெகு விரைவில் முகத்திரைகள் கிழியும். அதற்கு நடுவில் பாலிவுட் போல யாரும் தற்கொலை அது இதுன்னு இறங்கிவிடக்கூடாது. குழு அரசியல் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும்"

இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE