விமானத்தில் வராத கரோனா திரையரங்குகளில் மட்டும் எப்படி வரும்? - ரோகிணி பன்னீர்செல்வம் கேள்வி

By செய்திப்பிரிவு

விமானத்தில் வராத கரோனா திரையரங்குகளில் மட்டும் எப்படி வரும்? என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து இந்தியாவில் திரையரங்குகள் அனைத்துமே மூடப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு கரோனா அச்சுறுத்தலைக் கணக்கில் கொண்டு, சில தளர்வுகளை அறிவித்து வருகிறது மத்திய அரசு. அதில் திரையரங்குகள் திறப்பு தொடர்பாக எந்தவொரு அறிவிப்புமே இல்லாமல் இருந்தது.

சில தினங்களுக்கு முன்பு ஆகஸ்ட் மாதம் திரையரங்குகள் திறக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அதற்காகப் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக எந்தவொரு அறிவிப்புமே இல்லை.

இதனிடையே திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது:

"கரோனா ஊரடங்கு தொடங்கி 125 நாட்கள் கடந்துவிட்டன. திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர். அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாத நிலையாக இருக்கிறது.

இதன் மூலம் 1,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு திரையரங்கத்திற்கும் 25 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் படத்தயாரிப்புகள் இல்லாமல் சினிமா சார்பான இழப்பு என்றால் 3,000 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

திரையரங்குகளை எப்போது திறப்பார்கள் என்று அரசுத் தரப்பிலிருந்து பதில் வரும் என்று நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது விமானங்கள் எல்லாம் இயங்க ஆரம்பித்துவிட்டன. விமானத்தில் நெருக்கமாக அமர்ந்துதான் பயணம் செய்கிறார்கள். விமானத்தில் வராத கரோனா திரையரங்குகளில் மட்டும் எப்படி வரும்?

திரையரங்கத்தில் ஏதாவது மாற்றம் செய்யச் சொன்னால் நாங்கள் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். விரைவில் திரையரங்குகள் திறப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். அதற்கான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்".

இவ்வாறு ரோகிணி பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE