’பைரவி’ திரைப்படம் 1978-ம் ஆண்டில் வெளியாகியுள்ளது. இதே ஆண்டில் வெளியான ’முள்ளும் மலரும்’ போல் இதுவும் ஓர் அண்ணன் தங்கைப் படமே. ’பைரவி’ வெளியாவதற்கு முன்னரே ரஜினி, ’மூன்று முடிச்சு’, ’அவர்கள்’, ’புவனா ஒரு கேள்விக்குறி’, ’16 வயதினிலே’, ’காயத்ரி’ போன்ற பல வெற்றிகரமான படங்களில் நடித்துவிட்டார். ஆனால், தனியான கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் என்பதே M.பாஸ்கர் M.A. இயக்கிய ’பைரவி’யின் தனிச் சிறப்பு.
படத்தில் ரஜினியின் பெயர் மூக்கையன். அவருக்கு ஒரு தங்கை. அவளது பெயர்தான் பைரவி (கீதா). தாயற்ற குடும்பம். ஒரு நாள் குடிகாரத் தந்தை வைத்திருந்த பணத்தை எடுத்துத் தங்கைக்கு உணவு வாங்கி வருகிறான் சிறுவனான மூக்கையன். இதில் ஆத்திரமடைந்த தந்தை அரிவாளை எடுத்துக் குழந்தைகளை வெட்ட வருகிறார்.
அவரிடமிருந்து தப்பித்து வரும் மூக்கையன் நதியோரம் கிடந்த பரிசலில் தங்கையை அமர்த்தி, பரிசலை ஓட்டி வருகிறான். நதியின் சுழலில் மாட்டிய பரிசல் கவிழ்கிறது. மூக்கையனும் பைரவியும் நதியில் விழுகிறார்கள். மூக்கையன் பிழைத்துவிடுகிறான். தங்கை பெயர் சொல்லிக் கதறிப் பார்க்கிறான். ஆனால் பதிலேதுமில்லை. தங்கை இறந்துவிட்டதாகக் கருதி, துயரத்துடன் தான் ஒதுங்கிய கிராமத்துக்கு வருகிறான்.
அந்த ஊரின் பண்ணையார் குடும்பத்துப் பெண்மணி அவனுக்கு அடைக்கலம் தருகிறார். தன் மகன், மகளுடன் மூக்கையனையும் வளர்க்கிறார் அவர். அந்த நன்றிக்கடனுக்காகவே அவன் வயதையொத்த பண்ணையார் ராஜலிங்கம் (ஸ்ரீகாந்த்) கூடவே இருக்கிறான் மூக்கையன். அவருக்கு எதிராக யாரும் ஒரு சொல் சொன்னாலும் மூக்கையன் வெகுண்டெழுந்துவிடுவான். அவனது அநீதிகளுக்குத் துணைபோகிறான். பழியேற்றுக்கொள்கிறான். ராஜலிங்கத்தின் தங்கை மீனா (Y.விஜயா). அவளுக்கு அண்ணன் செயல் பிடிக்கவேயில்லை. மூக்கையன் மேல் பரிதாபமே கொள்கிறாள்.
அதே கிராமத்தைச் சேர்ந்த பவுனுக்கு (ஸ்ரீபிரியா) மூக்கையன் மீது காதல். அவளும் சொல்லிப் பார்க்கிறாள். ஆனால், மூக்கையன் முதலாளி விசுவாசத்தை விடுவதாக இல்லை. ராஜலிங்கத்துக்கு எதிராக நடந்துகொள்பவர்களைக் காட்டு பங்களாவில் அடைத்துவிடுவது மூக்கையனின் வழக்கம். அப்படியொரு நாளில், பக்கத்து ஊர் கன்னிப்பெண்ணான பாக்கியம் என்பவளைக் கரும்பு திருடியதற்காகக் காட்டு பங்களாவில் அடைக்கச் சொல்கிறான் ராஜலிங்கம். மூக்கையன் அப்படியே செய்கிறான்.
மூக்கையனுக்குத் தெரியாமல் அந்தப் பெண்ணைப் பாலியல் வல்லுறவுசெய்துவிடுகிறான் ராஜலிங்கம். மயக்கமுற்ற அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். பாக்கியத்தின் அண்ணன்கள் மாணிக்கமும் (சுதிர்), பழைய பண்ணை பஞ்சாட்சரமும் (சுருளி ராஜன்) அவளைக் காப்பாற்ற முயல்கிறார்கள். அவர்கள் குறித்து அறிய வந்த மூக்கையனுக்கு, தன் தங்கை பைரவி சாகவில்லை, பாக்கியம்தான் பைரவி என்ற உண்மை தெரியவருகிறது. சொந்தத் தங்கை சீரழியக் காரணமாகிவிட்டோமே என்று வருந்துகிறான்.
தன் முதலாளியிடம் தங்கைக்கு வாழ்க்கை தருமாறு கோருகிறான். அப்போதுதான் ராஜலிங்கத்தின் சுயரூபம் மூக்கையனுக்குத் தெரியவருகிறது. பாக்கியத்தை மூக்கையன்தான் வல்லுறவு செய்தான் என்று பழியை அவன்மீது போட்டு அவனைச் சிறைக்கு அனுப்புகிறான் ராஜலிங்கம். சிறையிலிருந்து தப்பிய மூக்கையன் ராஜலிங்கத்தைப் பழிவாங்கப் புறப்படுகிறான்.
மருத்துவமனையிலிருந்த பாக்கியத்தைக் கொன்று அந்தப் பழியையும் மூக்கையன் மேல் போடுகிறான் ராஜலிங்கம். தன் தங்கையைச் சீரழித்துக் கொன்ற மூக்கையனைப் பழிக்குப் பழி வாங்குவேன் என்று சூளுரைக்கிறான் மாணிக்கம். மாணிக்கத்திடம் மூக்கையன் மாட்டினானா, ராஜலிங்கத்தை அவனால் பழிவாங்க முடிந்ததா என்பதையெல்லாம் எஞ்சிய படம் விவரிக்கிறது.
படத்தைத் தயாரித்திருக்கும் கலைஞானம் எழுதிய கதைக்குத் திரைக்கதையையும் வசனத்தையும் எழுதியுள்ளார் மதுரை திருமாறன். கதையம்சம் வலுவாக உள்ள படம்தான். நகைச்சுவைக்காக சுருளிராஜன், வி.கே.ராமசாமி, மனோரமா ஆகியோர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். நகைச்சுவை பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ’உனெக்கெல்லாம் எதுக்கு மீசை’ என்று மனோரமா கேட்கையில், ’தானா வளருது யூரியா போட்டா வளர்க்கேன்’ என சுருளி சொல்வது நயமான பதில். வீரத்துக்கு அடையாளமான ஜல்லிக்கட்டு இந்தப் படத்தில் நகைச்சுவைக்குப் பயன்பட்டுள்ளது.
ரஜினிக்கு நல்ல கதாபாத்திரம். ரசிகர்களை ஈர்க்கும்படியான வேடம். முதலாளிக்கு விசுவாசமாக இருந்தும் சொந்தத் தங்கை மீது அவன் நடந்துகொண்ட விதம் ரஜினிக்கு ஆத்திரமூட்டும்போது அவர் விஸ்வரூபம் எடுக்கிறார். அப்போது பேசும் வசனங்களும் நடிப்பும் ரஜினியின் இமேஜை உயர்த்தியதில் பெரும்பங்காற்றியுள்ளன. இடக் கண்ணை மூடிக்கொண்டு உடல்மொழியில் ரஜினி காட்டும் ஸ்டைல் கவரக்கூடியது. தான் ஒரு சூப்பர் ஸ்டார்தான் என்பதை நிரூபிக்க தனக்குக் கிடைத்த வாய்ப்பை ரஜினி சரியாகப் பயன்படுத்தியுள்ளார்.
இளையராஜாவின் இசையில் ‘கட்டபுள்ள குட்ட புள்ள…’ என்னும் காதல் பாடலும், ‘நண்டூருது நரியூருது…’ என்னும் சோகப் பாடலும் இப்போது கேட்டாலும் அலுக்காதவை. ரஜினிக்கு டி.எம்.சௌந்தரராஜனின் குரல்தான். இந்தப் படத்தை எண்பதுகளின் இறுதியில் ஏதோ ஒரு கோயில் திருவிழாவுக்காக திருநெல்வேலி மாவட்டம், இப்போது தென்காசி மாவட்டம், இலஞ்சியில், திரை கட்டி படம் போட்டபோது பார்த்திருக்கிறேன். அதன் பின்னர் இப்போது யூடியூபில் பார்த்தேன். படம் அலுப்பேற்படுத்தாமல் இப்போதும் சுவாரசியமாகப் பார்க்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் ரஜினி நடித்த ’வேலைக்காரன்’, ’முத்து’ போன்ற படங்களில் ரஜினி ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்கு இந்தப் படத்தின் மூக்கையன் கதாபாத்திரம் தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டும். படத்தில் நட்பு இருக்கிறது, காதல் இருக்கிறது, அண்ணன் தங்கைப் பாசம் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து ஒரு முழுமையான வணிகப்படமாக்கியதில் பாஸ்கரின் இயக்குமும் முக்கியப் பங்குவகிக்கிறது. ரஜினிகாந்த் சிறையிலிருந்து தப்பித்து வரும் காட்சியில் கட்டவிழ்த்து ஓடி வரும் குதிரையையும் ரஜினியையும் மாற்றி மாற்றிக் காட்டும் காட்சியில் இயக்குநரின் முத்திரை தென்படுகிறது.
தன்னைத் தேடிக்கொண்டு போலீஸ் ஸ்ரீபிரியா வீட்டுக்கு வந்து விசாரிக்கும்வேளையில், மரத்தடியில் மறைந்திருப்பார் ரஜினி. அப்போது நல்ல பாம்பு ஒன்று வர அதைக் கையில் பிடித்துக்கொண்டு, படமெடுத்தாடும் அதன் தலையில் தட்டுவார். ரஜினி ரசிகர்களைப் பெரிதும் கவரும் வகையில் காட்சி அமைந்திருக்கும். பாம்பைப் பிடித்தபடி ரஜினி மரத்தடியில் மறைந்திருக்கும் காட்சியை சுவரொட்டியில் பயன்படுத்தியுள்ளார் அப்படத்தின் சென்னை விநியோகஸ்தரான கலைப்புலி தாணு. அது பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் சுவரொட்டிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினி என தாணு அச்சிட்டு விளம்பரப்படுத்தியிருக்கிறார். அந்த சூப்பர் ஸ்டார் என்னும் முன்னொட்டு இன்றுவரை ரஜினியின் பெயரை அலங்கரிக்கிறது.
ரஜினி ரசிகர்கள் பார்த்து ரசிக்க வேண்டியதொரு தொடக்கக் காலப் படம் 'பைரவி'.
அடுத்த அத்தியாயத்தில் பாஸ்கர் இயக்கிய இன்னொரு படத்தைப் பார்ப்போம்…
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago