கங்கணாவை நினைத்துப் பெருமை கொள்கிறேன்: நடிகை மதுபாலா கருத்து

சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. சுஷாந்த் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி நடிகை கங்கணா, பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக #JusticeforSushant என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை மதுபாலா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

''நான் 1990-ம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறேன். அன்றைய காலகட்டங்களில் எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. தொடர்ந்து படங்கள் கிடைத்தன. நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக அப்போது உணர்ந்ததே இல்லை. அநியாயமாக எதையும் நான் உணர்ந்ததில்லை. எனக்குக் கிடைப்பதையும் கிடைக்காததையும் என் தொழிலிலின் ஒரு அங்கமாகவே பார்த்தேன்.

எங்களுக்கும் ஏமாற்றம் நடக்கும். ஆனால், நாங்கள் அதைக் கடந்து சென்றோம். ஆனால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நான் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், நடிகை கங்கணா தனது அனுபவங்கள் குறித்து பொதுவெளியில் தைரியமாகப் பேசுவதுதான். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். பெரும்பாலானோர் தன்னுடைய அனுபவங்கள் குறித்துப் பொதுவெளியில் பேசுவதில்லை. தங்களுக்கான வாய்ப்புகள் பறிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம்தான் காரணம். இன்றும் அந்த பயம் பலருக்கு இருப்பதைக் காண்கிறேன்.

சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் மும்பை காவல்துறை மெத்தனமாகச் செயல்படுவது வருத்தமளிப்பதாக உள்ளது. இந்த வழக்கைப் பற்றி அவர்கள்தான் நமக்குச் சொல்லவேண்டும். ஆனால் அதற்கு மாறாக கங்கணா போன்றவர்கள் வழக்கைப் பற்றிய பல விஷயங்களை ஆய்வு செய்து பேசுகின்றனர்.

தற்போது பல விஷயங்கள் வெளியே வந்துகொண்டிருக்கின்றன. உங்களை யாரேனும் நசுக்கினால், தனிமைப்படுத்தினால் பொதுவெளியில் அதைப் பற்றிப் பேச இதுதான் சரியான தருணம்''.

இவ்வாறு மதுபாலா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE