‘டெனெட்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி - வார்னர் ப்ரதர்ஸ் அறிவிப்பு

'டெனெட்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டெனெட்’. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘டன்கிர்க்’ படத்திற்குப் பிறகு நோலன் இயக்கிய படம் இது. இப்படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், மைக்கேல் கெய்ன், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இரண்டு ட்ரெய்லர்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘டெனெட்’ திரைப்படம் ஊரடங்கால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. வார்னர்ஸ் பிரதர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கங்கங்களில் ரசிகர்கள் பலரும் ‘டெனெட்’ ரிலீஸ் தேதி குறித்து கேள்வியெழுப்பி வந்ததால் பின்னர் இப்படம் ஜூலை 31ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் இப்படம் ஆக்ஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

கரோனா அச்சுறுத்தல் குறையாத நிலையில் திரையரங்குகள் திறக்கப்படாததால் ‘டெனெட்’ திரைப்படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்கா தவிர்த்து ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரியா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட 70 நாடுகளில் ஆகஸ்ட் 26ஆம் தேதி ‘டெனெட்’ வெளியாகும் என்று வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் கரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் மற்ற நாடுகளில் வெளியான ஒருவாரம் கழித்து செப்டம்பர் 3 அன்று ‘டெனெட்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. சீனாவில் படம் வெளியாவது குறித்து எந்த அறிவிப்பையும் வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE