கரோனா நெகட்டிவ்: வீடு திரும்பிய ஐஸ்வர்யா ராய்

கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் எனத் தெரியவந்ததைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா ராய் வீடு திரும்பியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மகன் அபிஷேக் பச்சன், அபிஷேக்கின் மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முதலில் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா இருவருமே வீட்டுத் தனிமையிலேயே இருந்தார்கள்.

ஆனால், ஐஸ்வர்யா ராய்க்குத் திடீரென்று காய்ச்சல் அதிகரித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அனைவருக்குமே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா இருவரின் உடல்நிலை சீரானதால், இன்று (ஜூலை 27) கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது இருவருக்கும் கரோனா நெகட்டிவ் என்பது உறுதியானதைத் தொடர்ந்து இருவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"உங்கள் அனைவரது தொடர் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துகளுக்கும் நன்றி. என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன். ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா இருவருக்கும் பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. அவர்கள் இருவரும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டனர். இப்போது அவர்கள் வீட்டில் இருப்பார்கள். நானும் என் அப்பாவும் மருத்துவ ஊழியர்களின் பராமரிப்பில் இன்னும் மருத்துவமனையிலேயே இருக்கிறோம்".

இவ்வாறு அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE