சுஷாந்த் தற்கொலை விவகாரம்: கங்கணாவுக்கு மும்பை போலீஸ் சம்மன்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் பிரபலங்களுக்கு இடையே கருத்து மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக சுஷாந்தின் நண்பர்கள், ஊழியர்கள், சஞ்சய் லீலா பன்ஸாலி, ஆதித்யா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த் தற்கொலை வழக்குத் தொடர்பாக நடிகை கங்கணா, கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அபூர்வா மேத்தா உள்ளிட்டோருக்கு மும்பை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''இன்னும் ஓரிரண்டு நாட்களில் சுஷாந்த் தற்கொலை தொடர்பான வழக்கில் மகேஷ் பட்டின் வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்யவுள்ளனர். நடிகை கங்கணாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கரண் ஜோஹருக்கு சம்மன் அனுப்பப்படும்''.

இவ்வாறு அனில் தேஷ்முக் கூறியுள்ளார்.

இதற்கு முன் கரண் ஜோஹரின் மேலாளர் ரேஷ்மா ஷெட்டியின் வாக்குமூலத்தையும் போலீஸார் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரண் ஜோஹருக்கு சம்மன் அனுப்பப்படாததைக் கண்டித்து கங்கணாவின் சமூக வலைதளக்குழுவின் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. அதில், ''கரண் ஜோஹரின் மேலாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஆதித்யா தாக்கரேவின் நெருங்கிய நண்பரான கரண் ஜோஹருக்கு இன்னும் அனுப்பப்படவில்லை. சுஷாந்த் கொலை விவகாரத்தில் விளையாடுவதை மும்பை காவல்துறை நிறுத்தவேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE