மணிரத்னத்தின் எதிர்பார்ப்புகள் மிக உயரத்தில் இருக்கும்: ரவி கே.சந்திரன்

மணிரத்னத்தின் எதிர்பார்ப்புகள் மிக உயரத்தில் இருக்கும் என்று ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் தெரிவித்துள்ளார்

இந்தியத் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி கே.சந்திரன். மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி பின்பு தமிழ், இந்தி, தெலுங்கு என பிரபலமானார். 'ஆனஸ்ட்ராஜ்', 'மின்சார கனவு', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'தில் சாதா ஹை', 'ஆயுத எழுத்து', 'ப்ளாக்', 'கஜினி (இந்தி)', 'மை நேம் இஸ் கான்', 'சாவரியா', 'ஆதித்ய வர்மா' உள்ளிட்ட பல படங்களின் மூலம் தனது ஒளிப்பதிவு திறமையை நிரூபித்தவர்.

இவருடைய ஒளிப்பதிவில் மலையாளத்தில் 'கடுவா' மற்றும் இந்தியில் 'கூலி நம்பர் 1' ஆகிய படங்கள் தயாராகி வருகிறது. 2014-ம் ஆண்டு வெளியான 'யான்' படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார் ரவி கே.சந்திரன். அந்தப் படத்துக்குப் பிறகு எந்தவொரு படத்தை இயக்கவில்லை.

இதனிடையே, 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு ரவி கே.சந்திரன் அளித்துள்ள பேட்டியில் "நீங்கள் பணிபுரிந்ததில் மிகவும் சவாலான ஒரு படம்" என்ற கேள்விக்குப் பதிலளித்திருப்பதாவது:

"ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான சவால்கள் இருக்கும். ஆனால் இப்போதுவரை (சஞ்சய் லீலா இயக்கிய) 'சாவரியா' திரைப்படம் தான் அப்படிப்பட்டது. முழுப்படமும் ஒரு மிகப்பெரிய செட்டுக்குள் எடுக்கப்பட்டது. அதில் பெரும்பாலானவை இரவு நேரக் காட்சிகள். ஆனால் நான் பணிபுரிந்ததிலேயே மிகவும் அதிகமாக எதிர்பார்க்கிற இயக்குநர் யாரென்று கேட்டால், அது மணிரத்னம் தான். அவருடைய எதிர்பார்ப்புகள் மிக உயரத்தில் இருக்கும்"

இவ்வாறு ரவி கே.சந்திரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE