கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே படப்பிடிப்பு நடத்துவது கடினம்: பவன் கல்யாண்

கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே படப்பிடிப்பு நடத்துவது கடினம் என்று நடிகர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தலால் வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்பு எதுவுமே நடைபெறவில்லை. திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிலேயே இருக்கிறார்கள். சமூக வலைதளம் மூலமாக கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

தெலுங்கு திரையுலகில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டாலும், எந்தவொரு பெரிய பட்ஜெட் படமும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இதனால் எப்போது படப்பிடிப்பு என்ற தகவலை எந்தவொரு படக்குழுவுமே இன்னும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் அரசியல் நிலவரங்கள் குறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் இறுதியில் "உங்களுடைய படங்களின் படப்பிடிப்பு" என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக அவர் கூறியிருப்பதாவது:

"கரோனாவால் எல்லாமே நின்று போயுள்ளன. அதனால் படப்பிடிப்பு எப்போதும் தொடங்கும் என்று தெரியாது. சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். அவசர அவசரமாக படப்பிடிப்பு நடத்துவது கடினம். அதே வேளையில், சிலர் ஆந்திர அரசையும், கேசிஆர்-ஐயும் சந்தித்துள்ளனர். ஒப்புதலைத் தவிர வேறு எந்த படப்பிடிப்பு நிபந்தனைகளும் இல்லை.

யாருக்காவது கரோனா தொற்று ஏற்பட்டால், உதாரணத்துக்கு, முதலில் அமிதாப் பச்சனுக்கு தொற்று ஏற்பட்டது. முக்கிய நடிகர்களுக்கே தொற்று ஏற்படும்போது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படும். இது மிகவும் கடினம். மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்"

இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தவர் மீண்டும் திரையுலகிற்கு திரும்பி 'பிங்க்' தெலுங்கு ரீமேக்கான 'வக்கீல் சாப்' மற்றும் க்ரிஷ் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் பவன் கல்யாண்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE