எனக்கும் மோசடி வழக்கிற்கும் சம்பந்தமில்லை என்றும், தவறான தகவல் பரப்புவோர் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்படும் என்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பண மோசடி வழக்கில், பிரபல சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். ஆஜராகத் தவறினால் போலீஸார் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஜூலை 23) உத்தரவிட்டது.
முன்னணித் தயாரிப்பாளர் என்பதால் இந்தச் செய்தி பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது. தற்போது இந்தச் செய்தி தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார் ஞானவேல்ராஜா.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"கரோனா வைரஸ் தாக்கத்தால் பொதுமக்களும், திரைத்துறையினரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் இன்றைய நிலையில் சில தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிகைகள், மற்றும் சமூக வலைதளங்கள் என்னைப் பற்றிய உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்தச் செய்திகளில் எள் முனையளவும் உண்மையில்லை என்பதைத் தெரிவிப்பதற்காகவே இந்த விளக்க அறிவிப்பை வெளியிடுகிறேன்.
தமிழ்த் திரையுலகிற்கு தேசிய விருது உட்பட பல விருதுகளையும், பல திறமையான நடிகர்களையும், படைப்பாளிகளையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் தந்துள்ள எனது 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட 'மகாமுனி' திரைப்படம் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ம் தேதி ரிலீஸ் ஆனது.
நீதிமணி என்பவர் 2019-மே மாதம் என்னை அணுகி 'மகாமுனி' திரைப்படத்தின் தமிழ்நாடு ஏரியா விநியோக உரிமை தனக்கு வேண்டும் என்று கோரினார். அவ்வகையில் 2019-ம் ஆண்டு மே 27-ம் தேதி ரூ.6,25,00,000 (ஆறு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபாய்) தொகைக்கு நீதிமணியின் 'Tarun Pictures' நிறுவனத்திற்கு 'மகாமுனி' திரைப்படத்தை விற்பனை செய்வதாக முறையான ஒப்பந்தம் போடப்பட்டது.
நீதிமணி பகுதித் தொகையாக ரூ.2,30,00,000 (இரண்டு கோடியே முப்பது லட்சம்) மட்டுமே செலுத்தினார். மீதமுள்ள ரூ.3,95,00,000 (மூன்று கோடியே தொன்னூற்று ஐந்து லட்சம்) தொகையை பிறகு தருவதாகக் கூறினார். இன்றுவரை தராமல் என்னை ஏமாற்றிவிட்டார். மீதமுள்ள தொகையைத் தரவேண்டி நீதிமணி மீது சினிமா துறையின் சட்ட திட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமணியும் அவரின் கூட்டாளிகளும் ரூ.3,00,00,000 (மூன்று கோடி) மோசடி செய்துவிட்டதாக துளசி மணிகண்டன் என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார். என் மீதோ, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மீதோ எவ்விதப் புகாரும் அளிக்கப்படவில்லை. ஒரு பொருளை வர்த்தகம் செய்யும்போது அதை வாங்கும் நபர் என்ன செய்கிறார், அவரின் பின்னணி என்ன என்பதை நாம் ஆராய்ச்சி செய்வதில்லை. சட்டப்படியான வியாபாரத்தை மட்டுமே பேசமுடியும். அவ்வகையில் 'மகாமுனி' திரைப்படத்தை சட்டப்படியாக முறையாக விற்பனை செய்ததைத் தவிர எனக்கும் நீதிமணிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
நீதிமணி மீது துளசி மணிகண்டன் அளித்துள்ள புகாரில் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் என்னையும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தையும் இணைத்து என் புகைப்படத்தையும் பயன்படுத்தி நான் நிதி மோசடி செய்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி '300 கோடி ரூபாய் மோசடி' என உண்மைக்குப் புறம்பான, மிகவும் தவறான செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
என்னிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல், தன்னிச்சையாகவும், தனிமனித சுதந்திரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்திகளைப் பார்த்து நானும், என் குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளோம்.
இதுபோன்ற செய்திகள் திரைத்துறையில் நான் சம்பாதித்து வைத்திருக்கும் நற்பெயருக்கு ஊறு விளைப்பதோடு எமது எதிர்கால வியாபாரத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்துகள் உள்ளன. எனவே, இதுபோன்ற செய்திகளை என் அனுமதி பெறாமலும், உண்மைக்குப் புறம்பாகவும் யாரும் வெளியிட வேண்டாம் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், இதுபோன்ற செய்திகள் வெளியிடுவது தொடர்ந்தால் அந்தச் செய்தியை வெளியிடுபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குத் தொடர்வதோடு மான நஷ்ட ஈடு வழக்கும் தொடரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்".
இவ்வாறு ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
58 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago