சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது எப்படி?- மனம் திறந்த விஷ்ணு விஷால்

By செய்திப்பிரிவு

தன்னை சினிமாவில் எப்படி நிலைநிறுத்திக் கொண்டேன், எப்படித் திட்டமிட்டேன் என்பதை விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும், அவ்வப்போது தங்களுடைய பணி தவிர்த்து இதர திறமைகளையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் பல்வேறு நபர்களைப் பேட்டி எடுத்து வருகிறார். இவர் மாதவனை எடுத்த நேரலைப் பேட்டி பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதற்குப் பிறகு பல்வேறு நபர்களைப் பேட்டி கண்டவர், தற்போது நடிகர் விஷ்ணு விஷாலைப் பேட்டி எடுத்துள்ளார். அந்தப் பேட்டியில் கிரிக்கெட்டிலிருந்து எப்படி திரையுலகம் பக்கம் வந்தேன், திரையுலகப் பயணம் உள்ளிட்டவை குறித்து அஸ்வினின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார் விஷ்ணு விஷால்.

இதில் திரையுலகிற்கு வந்த புதிதில் எந்த அளவுக்குத் திட்டமிட்டு, என்னை நிலைநிறுத்தினேன் என்று பேசியுள்ளார் விஷ்ணு விஷால்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"முதல் படம் 'வெண்ணிலா கபடி குழு' பண்ணும்போது, நல்ல படம் பண்ணுகிறோம் என நினைத்தேன். 13 ஆண்டுகள் கழித்தும் கூட இப்போது வரை அது முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கிறது. எனது இரண்டாவது, மூன்றாவது படங்கள் மிகப்பெரிய ப்ளாப். என்னுடைய கேரியரில் மிகப்பெரிய ப்ளாப் படங்கள் என்றால் அது 2-வது மற்றும் 3-வது படம் தான்.

முதல் படம் வெற்றி என்றால் உடனே லக் என்று சொல்வார்கள். இரண்டாவது, மூன்றாவது படத்தின்போது தான் திறமையா, உழைப்பா என்பது எல்லாம் தெரியவரும். அந்தப் படங்களின் தோல்விக்குப் பிறகான காலங்கள்தான் என் வாழ்க்கையின் கடினமான காலகட்டம் என்பேன். கிரிக்கெட்டும் இல்லை, வேலையையும் விட்டுவிட்டேன். சினிமாவையும் விட்டுவிட்டேன் என்றால் என்ன செய்வது என ரொம்ப யோசித்தேன்.

அப்போதுதான் எனது ப்ளஸ் மற்றும் மைனஸ் என்ன என்று தெரிந்துகொள்ளத் தொடங்கினேன். சினிமாவில் நிலைநிறுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அப்புறம் தான் என்னை நிலைநிறுத்திக் கொள்ள போராடத் தொடங்கினேன். 'நீர்ப்பறவை', 'குள்ளநரிக்கூட்டம்', 'முண்டாசுப்பட்டி', 'இன்று நேற்று நாளை', 'ஜீவா' என நடித்தேன். இந்தப் படங்களின் கதைகளைப் பார்த்தால் கொஞ்சம் புதுமையாக இருக்கும்.

படத்தின் கதை முழுமையாக என்னைச் சுற்றி நடக்காது. சுமார் 10-15 கதாபாத்திரங்கள் முக்கியமானவையாக இருக்கும். அப்படி நடித்துதான் என்னை நிலைநிறுத்தினேன். நடிப்பைக் கற்றுக் கொண்டு வரவில்லை என்பதால், இந்த நாட்களில் நிலைநிறுத்தவும் செய்ய வேண்டும், கற்றுக் கொள்ளவும் வேண்டும்.

நம்மை நிலைநிறுத்திக் கொண்டோம் என்ற எண்ணம் 'ராட்சசன்' படத்துக்கு முன்புதான் வந்தது. அப்புறமாகத்தான் எனக்குக் கொஞ்சம் முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்தேன். செஸ் விளையாட்டு மாதிரி ஒவ்வொரு அடியுமே ரொம்பக் கவனமாக எடுத்து வைத்து வந்துள்ளேன். இப்போதுதான் நிலைநிறுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டேன். இனிமேல்தான் கொஞ்சம் கொஞ்சமாக வளர வேண்டும்".

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE