குறிப்பிட்ட தேதியில் அவதார் இரண்டாம் பாகத்தை வெளியிடுவது சாத்தியமில்லை: ஜேம்ஸ் கேமரூன்

2009-ல் வெளியான 'அவதார்' திரைப்படம், சினிமா வரலாற்றில் உலகம் முழுவதும் அதிக வரவேற்பைப் பெற்ற படமாக மாறியது. இதனைத் தொடர்ந்து 'அவதார்' படத்தின் அடுத்த பாகங்கள் உருவாகும் என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கடந்த சில வருடங்களாகவே கூறிவந்தார்.

அவதார் உலகை இன்னும் விரிவாக்கி, அடுத்த பாகங்களின் கதையைச் செதுக்கவே கேமரூன் 10 ஆண்டுகளை எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

முதல்கட்டமாக 'அவதார்' படத்தின் 2-ம் பாகம் 2021-ம் ஆண்டும், அதனைத் தொடர்ந்து 2023, 2025, 2027 என இரண்டு வருட இடைவெளியில் அவதார் 5 வரை அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அவதார் படங்களின் வெளியீட்டை ஒத்திவைக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருப்பதாக இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''அவதார் ரசிகர்களே,

அனைவரும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கரோனா அச்சுறுத்தலால் நியூசிலாந்து நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ‘அவதார்’ படத்தின் படப்பிடிப்பு எதிர்பாராத வகையில் வேறு வழியின்றி நீண்ட தாமதத்துக்கு உள்ளாக்கப்பட்டது. இப்போதும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெரும்பாலான தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ள விடாமல் இந்த வைரஸ் எங்களைத் தடுத்துக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பைப் போலவே அந்தப் பணிகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

கரோனாவுக்கு முன்னால், 2021 ஆம் தேதி டிசம்பர் மாதம் அவதார் இரண்டாம் பாகத்தைக் கொண்டுவருவதற்கான அனைத்து வேலைகளும் சரியான திசையில் சென்று கொண்டிருந்தன. துரதிர்ஷ்டவசமாக, கரோனா தாக்கத்தால் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிடுவது சாத்தியமில்லை.

இந்த தாமதத்தால் என்னை விட அதிகம் கவலைப்படுவோர் யாரும் இருக்க முடியாது. ஆனால் எங்களுடைய நடிகர்களின் அற்புதமான நடிப்பினாலும், பண்டோரோ உலகத்தை உருவாக்கி, படத்தின் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டும் வேடா டிஜிட்டல் நிறுவனத்தின் பணிகளாலும் நான் நிம்மதியடைகிறேன்.

டிஸ்னி நிறுவனத்திடமிருந்து குறிப்பாக ஆலன் ஹார்ன் மற்றும் ஆலன் பெர்க்மேன் ஆகியோரிடமிருந்து கிடைக்கும் ஆதரவுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

அனைத்துக்கும் மேலாக ரசிகர்களாகிய உங்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். வருடக்கணக்கான நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நாங்கள் திரையரங்கில் வெளியிடும் படத்தின் மூலம் நன்றிக்கடன் செலுத்துவோம்''.

இவ்வாறு ஜேம்ஸ் கேம்ரூன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE