இங்கே சக நடிகர்களிடமிருந்துகூட பாராட்டு கிடைப்பதில்லை: வித்யூத் ஜம்வால் ஆதங்கம்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்துக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக வெடித்துள்ளது. ஒரு மாதத்துக்கு மேல் தொடர்ச்சியாக முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. வாரிசு நடிகர்களின் சமூக வலைதளப் பக்கங்களுக்கே சென்று பலரும் அவர்களைச் சாடி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து வித்யூத் ஜம்வால் கருத்துத் தெரிவித்துள்ளார்.

''வாரிசு அரசியலை விடவும் சக நடிகர்களிடமிருந்து பாராட்டுக் கிடைக்காமல் இருப்பது ஒரு நடிகருக்கு கவலை அளிப்பதாக உள்ளது. எப்போதும் நாம் வெளியாட்களாகவே பார்க்கப்படுவோம். இங்கே மிகப்பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. அதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், அதற்கு நாம் என்ன செய்யமுடியும்?

நான் இங்கே மாற்ற விரும்புவது ஒன்றை மட்டும்தான். யாரும் யாரையும் ஒதுக்கக் கூடாது. தங்கள் கண்களில் படும் அனைத்தையும் அவர்கள் பாராட்டவேண்டும். வாரிசு அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், நல்ல மனிதராக இருந்து, ஒரு மனிதரின் சாதனைகளைப் பாராட்டுங்கள்.

இந்தத் துறைக்கு வெளியே இருக்கும் மக்களால் கிடைக்கும் பாராட்டுகள் உள்ளே இருப்பவர்களிடமிருந்து கிடைப்பதில்லை. அவர்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். யாரும் இதை பற்றி ட்வீட் செய்ய மாட்டார்கள். இது ஒன்றும் சோகமான விஷயம் அல்ல. இது எனக்குப் பழகிவிட்டது. எனவே ஒரு கதவு அடைக்கப்பட்டால் 100 கதவுகள் திறக்கும். அப்படித்தான் எனக்கான பயணத்தை அமைத்துக்கொண்டேன்''.

இவ்வாறு வித்யூத் ஜம்வால் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE