'பிச்சைக்காரன் 2' அப்டேட்: 'பாரம்' இயக்குநருடன் விஜய் ஆண்டனி கூட்டணி

By செய்திப்பிரிவு

'பிச்சைக்காரன் 2' படத்துக்காக தேசிய விருது வென்ற 'பாரம்' படத்தின் இயக்குநருடன் விஜய் ஆண்டனி கூட்டணி அமைத்துள்ளார்.

2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் 'பிச்சைக்காரன்'. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்தனர்.

இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் விஜய் ஆண்டனிக்கு முன்னணி நாயகன் அந்தஸ்து கிடைத்தது. இந்நிலையில், கரோனா ஊரடங்கில் 'பிச்சைக்காரன் 2' படத்துக்கான கதை, திரைக்கதையை விஜய் ஆண்டனியே எழுதி முடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே இந்தப் படத்தை தேசிய விருது வென்ற இயக்குநர் இயக்குவார் என்று விளம்பரப்படுத்தி வந்தது படக்குழு. பலரும் அதை இயக்குநர் பாலா என்று குறிப்பிட்டார்கள். ஆனால், அந்தப் படத்தை கடந்த ஆண்டு தேசிய விருது வென்ற 'பாரம்' படத்தின் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கவுள்ளார் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நாளை (ஜூலை 24) விஜய் ஆண்டனியின் பிறந்த நாளாகும். ஆகையால், காலை 11 மணியளவில் 'பிச்சைக்காரன் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடிப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இசையமைப்பாளர், நாயகன், தயாரிப்பாளர் ஆகியவற்றைத் தொடர்ந்து, 'பிச்சைக்காரன் 2' படத்தின் மூலம் கதாசிரியராகவும் விஜய் ஆண்டனி அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE