கொடைக்கானலில் தடையை மீறி சுற்றுலா சென்ற நடிகர்கள் விமல், சூரி: விதிமுறைகளை மீறியதால் அபராதம்

By பி.டி.ரவிச்சந்திரன்

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல தமிழக அரசு தடைவிதித்திருந்தபோதும், தடையை மீறி நடிகர்கள் விமல், சூரி உள்ளிட்டோர் கொடைக்கானலில் சுற்றுலா கொண்டாட்டத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விதிமுறைகளை மீறி பேரிஜம் ஏரியில் மீன்பிடித்ததாக வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் யாரும் செல்லக்கூடாது என தமிழக அரசு தடைவிதித்துள்ளது. கரோனா பாதிப்பு தொடங்கியது முதலே கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் பெரிய மருத்துவமனைகள் இல்லாதநிலையிலும் வெளியூர்களை சேர்ந்தவர்கள் சிலர் மருத்துவசிகிச்சைக்கு என முறைகேடாக இ பாஸ் வாங்கி கார்களில் கொடைக்கானல் வருவது அவ்வப்போது நடந்தது.

விதிமுறைகளை மீறி கொடைக்கானல் வந்து தங்கிய சிலரை வருவாய்த்துறையினர் உடனடியாக புறப்பட்டுச்செல்ல உத்தரவிட்ட நிகழ்வும் நடந்தது.

இந்நிலையில் நடிர்கள் விமல், சூரி மற்றும் திரைப்பட இயக்குனர் உள்ளிட்ட சிலர் கடந்த நான்கு நாட்களாக கொடைக்கானலில் தனியார் மாளிகையில் தங்கி பொழுதுபோக்கியது தெரியவந்துள்ளது.

இவர்கள் விதிமுறைகளை மீறி வனத்துறையினரின் மறைமுக ஆதரவில் பேரிஜம் பகுதிக்கு சென்றதும், அங்குள்ள பாதுகாக்கப்பட்ட ஏரியில் மீன்பிடித்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால் சர்ச்சையானது.

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல தடைவிதித்திருந்த நிலையில் இவர்களுக்கு எப்படி சென்னையில் இருந்து கொடைக்கானல் வந்தனர். எந்த அடிப்படையில் இ- பாஸ் பெற்று கொடைக்கானல் வந்தனர். மேலும் தடைசெய்யப்பட்ட பேரிஜம் ஏரியில் மீன் பிடித்தது குறித்து வனத்துறை கண்டுகொள்ளாதது ஏன் என உள்ளூர் மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

கொடைக்கானல் மலைப்பகுதியை கரோனாவில் இருந்து பாதுகாக்க உள்ளூரில் முழு அடைப்பு நடத்தி மக்கள் வீட்டிற்குள் முடங்கியிருக்கும்நிலையில், வெளியூரில் இருந்து இவர்கள் தடைகளை மீறி சுற்றுலா வந்ததால் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகாரா கொடைக்கானல் டி.எஸ்.பி., ஆத்மநாபனிடம் கொடுத்துள்ளனர்.

இதில், விதிமுறைகளை மீறி சென்னையில் இருந்து கொடைக்கானல் வந்துசென்ற நடிகர்கள் விமல், சூரி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும். மேலும் தடைசெய்யப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைய உடந்தையாக இருந்த வனத்துறை ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விமல் உள்ளிட்டோர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலா ரூ.2000 அபராதம் விதித்துள்ளனர். போலீஸார் இவர்கள் இ பாஸ் பெற்று வந்தனரா என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE