பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா எனப் பரவலாக அறியப்பட்ட இயக்குநர்களது படங்களைப் பற்றிப் பலரும் எழுதுகிறார்கள். ஆகவே, அவர்களது படங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் ஏராளமாகக் கிடைக்கின்றன. உலக சினிமா குறித்தும் உலக இயக்குநர்கள் குறித்தும்கூடத் தமிழிலே பல கட்டுரைகள் கிடைக்கின்றன. ஆனால், தமிழ்த் திரைப்படங்களில் பங்களிப்புச் செய்துள்ள இயக்குநர்கள் சிலரது படங்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் கிடைப்பதில்லை. கரோனா கால ஊரடங்கு நேரத்தில் அவர்களில் சிலரது படங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஆகவே, அப்படியான சிலரைப் பற்றியும் அந்தச் சிலரது படங்களைப் பற்றியும் சில தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.
முதலில் இயக்குநர் எம்.பாஸ்கர் பற்றிப் பார்க்கலாம். ஆலமரத்துக்குக் கீழே எதுவுமே வளராது என்று இயக்குநர் எம்.பாஸ்கர் தனது ‘பௌர்ணமி அலைகள்’ படத்தில் வசனம் ஒன்றை எழுதியிருப்பார். இந்தப் பழமொழி எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், அதைச் சரியான விதத்தில் சரியான இடத்தில் வசனமாகக் கையாண்டிருப்பார் அவர். தங்கள் படங்களுக்காகக் கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதியவர்கள் என பாக்யராஜையும் டி.ராஜேந்தரையும் முன்னிறுத்தும் பலருக்கும் பாஸ்கர் பெயரை அந்த வரிசையில் ஒன்றாக நிறுத்தத் தோணாது. காரணம் மேலே வாசித்த அந்தப் பழமொழிதான். யாரிந்த பாஸ்கர்?
பாஸ்கரைப் பற்றிய உடனடி அறிமுகம் வேண்டுமென்றால் இவர்தான் ரஜினி காந்த் முதலில் கதாநாயகனாக நடித்த ‘பைரவி’ படத்தை இயக்கியவர். 1978 ஜூன் 2 அன்று வெளிவந்த ‘பைரவி’ மகத்தான வெற்றிப் படமாக அமைந்தது. ரஜினிகாந்தின் நடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
» பாலிவுட்டை விட்டுத்தான் விலகுகிறேன்; சினிமாவிலிருந்து அல்ல: அனுபவ் சின்ஹா விளக்கம்
» சுஷாந்த் மரணத்துக்கு நீதி வேண்டி மெழுகுவர்த்தி போராட்டம் - கங்கணா பங்கேற்பு
எனது பள்ளிப் பருவங்களில் இவரது படங்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். சட்டப் பிரச்சினைகளைக் கதைக் கருவாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கியவர் இவர் என்பது மட்டும் மனத்தில் பதிந்துபோயிருந்தது. இவரைப் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடியபோது, அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைத்த தகவல்களைக் கொண்டு இந்தக் கட்டுரையை எழுதியுள்ளேன். விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் 1935 ஏப்ரல் 3 அன்று, வி.எஸ்.மாரியப்பன் - ஜானகி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலை முடித்திருக்கிறார். இயக்குநர் ஸ்ரீதரின்உதவியாளராகத் திரையுலகில் நுழைந்திருக்கிறார். இயக்குநர் எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், தூயவன் ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்திருக்கிறார்.
ஸ்ரீதர் இயக்கிய ’வெண்ணிற ஆடை’ (1965) திரைப்படம் ’வெண்ணிற ஆடை’ மூர்த்தி, ’வெண்ணிற ஆடை’ நிர்மலா, ஜெயலலிதா, ஸ்ரீகாந்த் ஆகியோரைப் போல பாஸ்கருக்கும் முதல் படம் என்கிறார்கள். ஆனால், அடுத்த ஆண்டில் வெளியான ’கொடி மலர்’ படத்தில்தான் டைட்டில் கார்டில் உதவி இயக்குநர் என பாஸ்கர் பெயர் இடம்பெறுகிறது. அதைத் தொடர்ந்து, ஸ்ரீதரின் ’நெஞ்சிருக்கும் வரை’, ’ஊட்டி வரை உறவு’, ’அவளுக்கென்று ஓர் மனம்’, ’சிவந்த மண்’ ஆகிய தமிழ்ப் படங்களிலும் இந்திப் படங்கள் சிலவற்றிலும் பாஸ்கர் பணியாற்றியுள்ளார். பின்னர் என்.சி.சக்கரவர்த்தி இயக்கிய ’உத்தரவின்றி உள்ளே வா’ திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிருக்கிறார்.
இதன் பின்னர்தான் இவருக்கு இயக்குநர் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் படம் ’இன்னும் ஒரு மீரா’ என விக்கிபீடியா குறிப்பிடுகிறது. ஆனால், அது தவிர்த்து வேறு எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. அதன் பின்னர் அவர் இயக்கிய படம்தான் ’பைரவி’. இந்தத் திரைப்பட வாய்ப்பு முதலிலேயே இவருக்குக் கிடைத்துவிடவில்லை. முதலில் இயக்குநர் பட்டாபிராமனுக்குக் கிடைத்த வாய்ப்பை அவர் மறுத்திருக்கிறார். ஆகவே, பாஸ்கருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. ’பைரவி’ படத்தைத் தயாரித்த கலைஞானம் ரஜினியைக் கதாநாயகனாக்கியதால் அவருக்கு ஆதரவு தருவதாக வாக்களித்திருந்த சாண்டோ சின்னப்பா தேவர் கையைவிரித்துவிட்டார். அப்போது வில்லனாக நடித்துவந்த ரஜினியைக் கதாநாயகனாக்கியது தேவருக்கு உவப்பாயில்லை என்பதே காரணம். படம் வெற்றிபெறுமா என்னும் சந்தேகத்தின் காரணமாகவே கலைஞானத்துக்கு தேவர் உதவவில்லை. ஆனால், முன்வைத்த காலை பின்வைக்க விரும்பாத கலைஞானம் ரஜினிதான் கதாநாயகன் என்று உறுதியாக இருந்தார். இந்தச் சூழலில்தான் எம்.பாஸ்கரை இயக்குநராக்க அவர் முடிவுசெய்திருக்கிறார்.
ரஜினிக்கு வில்லனாக நடிப்பதற்காக முத்துராமனை அணுகியிருக்கிறார்கள். ஆனால், அவரும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் இதே முத்துராமன் ரஜினிக்கு வில்லனாக ’போக்கிரி ராஜா’வில் நடித்திருந்தார். ஆகவே, அதுவரை நாயக பாத்திரத்தில் நடித்துவந்த ஸ்ரீகாந்தை அணுகி வில்லனாக நடிக்கச் சம்மதம் கேட்டிருக்கிறார்கள், அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். படத்தின் டைட்டிலில் முதலில் ஸ்ரீகாந்த் பெயர்தான் இடம்பெறும். அதற்குக் கீழேதான் ரஜினிகாந்தின் பெயர் வரும். இப்படித்தான் ’பைரவி’ படம் உருவாகியிருக்கிறது. படத்தின் விநியோகஸ்தரான தாணு இந்தப் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி என விளம்பரம் செய்திருந்தார். படமும் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது.
1980-ல் பாஸ்கர் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கினார் அதுதான் ஆஸ்கார் மூவிஸ். இதே ஆண்டில் இந்த நிறுவனத்தின் மூலம் இவர் தயாரித்துப் படமாக்கிய முதல் படம் ‘சூலம்’. அதே நிறுவனத்தின் பெயரில் இவர் எடுத்த படமான ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ வெள்ளிவிழா கண்டது. இந்தப் படம் வெள்ளிவிழா கண்டபோதும் இது குறித்து விக்கிபீடியாவில்கூடப் பக்கம் உருவாக்கப்படவில்லை.
ஏறக்குறைய ஆறிலிருந்து எட்டு மாதங்கள் வரை எடுத்து, திரைக்கதையை உருவாக்கி அதற்குப் பின்னர் அந்தத் திரைக்கதையை நண்பர்களிடம் படித்துக்காட்டி, அதை மேம்படுத்தி, பின்னர்தான் படப்பிடிப்புக்குச் செல்வார், எம்.பாஸ்கர் என இவரைப் பற்றி நடிகர் சிவகுமார் கூறியிருக்கிறார் எனத் தகவல் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. பாஸ்கரின் இயக்கத்தில் சிவகுமார் ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’, ‘தண்டிக்கப்பட்ட நியாயங்கள்’, ‘பௌர்ணமி அலைகள்’, ‘பன்னீர் நதிகள்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ’பைரவி’யும் இந்த நான்கு படங்களுமே எம்.பாஸ்கரின் திரைப்படங்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.
இதன் பின்னர் கார்த்திக் நாயகனாக நடிக்க ‘சட்டத்தின் திறப்பு விழா’, ‘சக்கரவர்த்தி’ ஆகிய படங்களை உருவாக்கியுள்ளார். மொத்தம் 11 படங்களை இயக்கியுள்ளார். பிரமாதமான இயக்குநர் என்று இவரை முன்வைக்க இயலாவிடினும் தனித்துவமான இயக்குநர் என்று சொல்லத்தக்க வகையில் படங்களை உருவாக்கியுள்ளார். ’விஷ்ணு’, ’காதல் ரோஜாவே’, ’தோட்டா’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நான்கு முறை செயலாளராக இருந்துள்ளார். 2013 ஜூலை 12 அன்று மாரடைப்பால் இவர் மரணமடைந்துள்ளார். அவரது படங்களைப் பற்றி வரும் அத்தியாயங்களில் விரிவாகப் பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago