வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்

By செய்திப்பிரிவு

வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்' எப்படி பெரிய வெற்றி படமாக அமைந்ததோ, அது போல் சந்தானத்துக்கு 'பிஸ்கோத்' படம் இருக்கும் என்று இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிஸ்கோத்'. மசாலா பிக்ஸ் நிறுவனம் மூலம் கண்ணனே தயாரித்து வருகிறார். நாயகிகளாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் ஸ்வாதி முப்பலா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கியக் கதாபாத்திரத்தில் பழம்பெரும் நாயகி செளகார் ஜானகி நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

'பிஸ்கோத்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே இந்தப் படத்தில் சுமார் 30 நிமிடக் காட்சிகள் 1980-களில் நடைபெறுவது போன்று வடிவமைத்துள்ளார் இயக்குநர் கண்ணன். இந்தப் பகுதியில் ராஜாவாக சந்தானம் நடித்துள்ளார்.

ராஜாவாக சந்தானம் நடித்திருப்பது குறித்து இயக்குநர் கண்ணன் கூறியிருப்பதாவது:

"படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான பாத்திரம் போல் வருகிறது .அதனால்தான் படத்துக்கு 'பிஸ்கோத்' என்று பெயர் வைத்தோம். சந்தானத்தின் வேறு சில பரிமாணங்களை இதில் வெளிப்படுத்தியிருக்கிறோம். வடிவேலுவுக்கு எப்படி 'இம்சை அரசன்' அமைந்ததோ அப்படி சந்தானத்துக்கு 'பிஸ்கோத்' படம் அமையும். அது போல் பேசப்படும் படமாகவும் இருக்கும்.

இந்தப்படத்தில் இந்த ராஜா காலகட்ட காட்சிகள் 30 நிமிடங்கள் வரும். இதற்காக அந்தக் காலத்து ஆதாரங்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு கலை இயக்குநர் ராஜ்குமார் அரங்கம் அமைத்தார். இதற்கான உடைகளுக்காக மிகவும் சிரமப்பட்டு உடை அலங்கார நிபுணர் பிரியா உடைகளை வடிவமைத்துக் கொடுத்தார். இதற்கான காட்சிகளில் துணை நடிகர்கள் 500 பேர் நடித்தார்கள் அவ்வளவு பேருக்கும் உடைகள் தயாரிக்கப்பட்டன.

படத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் வரும் காட்சிகளுக்குத்தான் இப்படி ராஜபார்ட் வேடமும் அரங்கங்களும் அமைக்கப்பட்டன. இன்னொரு பகுதியாக எண்பதுகளில் இடம்பெறும் காட்சிகள் வரும். மூன்றாவது பகுதியாக சமகாலத்துக் காட்சிகள் அதாவது இக்கால 2020-க்கான காட்சிகள் அமைந்திருக்கும். இம்மூன்று காலகட்டத்துக்கும் என்ன தொடர்பு என்பது படம் பார்த்தால் புரியும் .மொத்தத்தில் முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் படமாக இது இருக்கும்"

இவ்வாறு கண்ணன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE