தமிழில் முதல் ஆக்ஷன் ஹீரோ யார் என்பது தெரியும்தானே? முதல் மாஸ் ஹீரோ யார் என்று அறிவீர்கள்தானே. தமிழ்த்திரையுலகின் சூப்பர் ஹீரோ யாராக இருக்கும் என்பதை தெரிந்துகொண்டிருக்கிறீர்களே..! இந்த மூன்றுக்குமான பதில் மூன்றெழுத்துதான். எம்.ஜி.ஆர்.
பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு வழங்கும் ஹீரோவின் கதை என்றால் ‘அட ராபின்ஹூட் கதை’ என்று இன்றைக்குச் சொல்லுவோம். அப்படியொரு கதையில் எம்ஜிஆர் நடித்துத்தான் மாஸ் அந்தஸ்தைப் பெற்றார். பட்டிதொட்டியெங்கும், எம்ஜிஆரைக் கொண்டு சென்றது அந்தத் திரைப்படம். அதுதான் ‘மலைக்கள்ளன்’.
திரையுலகிலும் ரசிகர்களிடமும் ‘மலைக்கள்ளன்’ ஏற்படுத்திய தாக்கம் அசாதாரணம். அதற்கு முன்பு ஆக்ஷன் படங்கள் வந்திருந்தாலும் ‘மலைக்கள்ளன்’ மலைப்பை ஏற்படுத்திய அளவுக்கு அதுவரை எந்தப் படமும் ஏற்படுத்தவில்லை.
நாமக்கல் ராமலிங்கம் எழுதிய கதை. திரைக்கதை, வசனம் எழுதியவர் மு.கருணாநிதி. படத்தைத் தயாரித்தது பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் எனும் பிரமாண்டமான நிறுவனம். இந்தப் படத்தை இயக்கியவர் ஸ்ரீராமுலு நாயுடு. இவர்தான் படத்தைத் தயாரித்து இயக்கினார். இந்தப் படம் வருவதற்கு முன்பு ‘சந்திரலேகா’ பிரமாண்டப் படம் என்று பேரெடுத்தது. பின்னர், அந்தப் பட்டியலில் பிரமாண்டமாக இணைந்துகொண்டான் ‘மலைக்கள்ளன்’.
இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட பெருமைகள் உண்டு. முதல் பெருமை... தமிழில் முதன்முதலாக ஜனாதிபதி விருது பெற்ற முதல் படம் எனும் கெளரவத்தை ‘மலைக்கள்ளன்’ அடைந்தது. அந்த வருடத்தில், தமிழக அரசும் சிறந்த படமாக அங்கீகரித்து, விருது கொடுத்தது.
மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். ஊர் செட் போட்டிருப்பார்கள். காடு செட் போட்டிருப்பார்கள். காட்டில் மலை செட் போட்டிருப்பார்கள். ஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்குச் செல்ல ‘விஞ்ச்’ இருக்கும். அதில் சண்டையும் இருக்கும். ரசிகர்கள், வாய்பிளந்து சண்டைக்காட்சிகளை அதிர்ந்து பார்த்து வியந்தான். மலைத்துப்போனான். திரும்பத் திரும்பப் பார்த்தான்.
எம்ஜிஆருக்கு இது மிக மிக மிக முக்கியமான படம். அதுவரை அரச கதைகளில் நடித்துக் கொண்டிருந்தவர், இந்தப் படத்தில் சமூகக் கதையில் முதன் முதலாக நடித்தார். அதேபோல், கருணாநிதி, அரசியல் அதிகமில்லாமல், சமூக அவலங்களையும் ஏற்றதாழ்வுகளையும் தோலுரிக்கிற வசனங்களை பொளேர் சுளீரென எழுதியிருந்தார். இவையும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.
இந்தப் படத்தின் வெற்றியையும் தாக்கத்தையும் தொடர்ந்து, இதில் இருந்து ஒவ்வொன்றாக உருவி, ஏராளமான கதைகள் இன்று வரைக்கும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. படம் தொடங்கும் போது ஹீரோ குடும்பத்தைவிட்டுப் பிரிந்து, பிறகு படம் முடியும்போது சேருவான் என்பது மாதிரியான முடிச்சுகள், ‘மலைக்கள்ளன்’ படத்திலிருந்துதான் ஆரம்பித்தன. ’ராபின்ஹூட்’ கதையைச் சொல்லவே வேண்டாம்.
படத்தின் ஒளிப்பதிவு சைலன் போஸ். அந்தக் காலத்தில் மிகப்பெரிய ஒளிப்பதிவாளர். அதேபோல், எஸ்.எம்.சுப்பையா நாயுடு. இவருக்கு அடுத்து ஜி.ஆர்.ராமநாதன். பிறகு கே.வி.மகாதேவன். அடுத்து மெல்லிசை மன்னர்கள்... என்று பட்டியல் வரும். இதன் ஆரம்பகர்த்தாக்களில் முக்கியமானவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. படத்தில் ஏகப்பட்ட பாடல்கள். எல்லாமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
நாயகன் எம்ஜிஆர். நாயகி பானுமதி. எம்ஜிஆருக்கு இணையான கேரக்டர். நடிப்பில் வெளுத்துவாங்கியிருப்பார். பல பாடல்களை இவரே பாடியிருப்பார். அஷ்டாவதானி பானுமதியின் நடிப்பும் மிகப்பெரிய பலம். அதேபோல், எம்ஜி.சக்ரபாணி போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். இவரும் தன் பங்குக்கு சிறப்பாகவே நடித்திருந்தார். ரஞ்சன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.
எம்ஜிஆர், அதற்கு முன்பு வரை இப்படியும் அப்படியுமாக நடித்துக்கொண்டிருந்தார். இந்தப் படம் வந்த பிறகும் கூட சென்டிமெண்ட், குடும்பக் கதைகளில் நடித்திருந்தார். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக, மாஸ் ஹீரோ சப்ஜெக்ட் எனும் பாதைக்குள் நுழைந்தார். அப்படிப் புதியபாதை வகுத்துக் கொடுத்தது ’மலைக்கள்ளன்’ என்றுதான் சொல்லவேண்டும்.
இதைக் கொண்டுதான், எம்ஜிஆர் ஃபார்முலா எனும் விஷயத்தை உருவாக்கினார் எம்ஜிஆர். சமூகக் கதைதான் என்றாலும் எம்ஜிஆர் மட்டும் ராஜா காலத்து ஆடைகளை அணிந்திருந்தார் என்பது ஆச்சரியம்தான். அதேபோல, படத்தின் வசனங்களுக்காக தியேட்டர்களில் கைதட்டல்கள் கேட்டுக்கொண்டே இருந்தன.
’மலைக்கள்ளன்’ குறித்து சொல்லும்போது ஒரு தகவல் சொல்லுவார்கள். ஒன்று... இந்தப் படத்தில் முதலில் சிவாஜிதான் நடிக்க வேண்டியிருந்தது. அப்போது இரண்டு படங்களில் நடிக்க ஒத்துக்கொண்டிருந்ததால், அவரால் நடிக்க முடியவில்லை. பிறகு எம்ஜிஆர்தான் நடித்தார். அப்படி ’எம்ஜிஆரைப் போடுங்களேன். நல்லாருக்கும்’ என்று சொன்னவர்... சிவாஜி கணேசன்.
அதேபோல், கருணாநிதி, இந்தப் படத்துக்கு வசனம் எழுத சம்மதிக்கவில்லையாம். காரணம்... எம்ஜிஆர்தான். அப்போது அவர் காங்கிரஸ் அபிமானியாக இருந்தாராம். பிறகுதான் சம்மதித்தார் என்றொரு தகவல் சொல்லுவார்கள்.
முதல் ஜனாதிபதி விருது பெற்ற இந்த ‘மலைக்கள்ளன்’ திரைப்படம், 1954ம் ஆண்டு வெளியானது. இதே ஆண்டில் வேறொரு வகையில், சிறந்த படங்கள் என்று இரண்டு விருதுகள் இரண்டு படங்களுக்குக் கிடைத்தன. ஒன்று... ‘எதிர்பாராதது’. இன்னொன்று... ‘அந்தநாள்’. இரண்டுமே சிவாஜி நடித்த படங்கள்.
‘மலைக்கள்ளன்’ திரைப்படம் மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இந்தப் படம் வெளியான கையுடன், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என்று நான்கு மொழிகளிலும் தயாரித்து இயக்கினார் ஸ்ரீராமுலு நாயுடு. ஆக, ஐந்து மொழிகளிலுமே வெற்றியைத் திருடிக் கொடுத்தான் ‘மலைக்கள்ளன்’.
’தமிழன் என்றொரு இனமுண்டு’ என்பது உள்ளிட்ட பல பாடல்கள் உள்ளன. முக்கியமாக, இத்தனை காலங்கள் கடந்தும் கூட, இன்றைக்கும் பொருந்துகிற பாடல்... மிகப்பெரிய ஹிட்டடித்த பாடல்... ‘எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...’ பாடல்! படம் திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் 100 நாள், 140 நாள் என ஓடியது.
1954ம் ஆண்டு, ஜூலை மாதம் 22ம் தேதி வெளியானது ‘மலைக்கள்ளன்’. வெளியாகி 66 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும், இன்றைக்கும் மலைக்க வைத்துக் கொண்டிருக்கிறான் ‘மலைக்கள்ளன்’.
முதல் ஆக்ஷன் படம், முதல் ஆக்ஷன் ஹீரோ, முதல் ஜனாதிபதி விருது... எல்லாவற்றுக்கும் மேலாக எம்ஜிஆர் எனும் முதல் ஆக்ஷன் ஹீரோவின் முதல் ஆக்ஷன் படமான ‘மலைக்கள்ளன்’ படத்தை, தமிழ் சினிமா என்றைக்குமே மறக்காது!
முக்கிய செய்திகள்
சினிமா
29 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago