சிம்புவுக்குப் புகழாரம் சூட்டிய விஷ்ணு விஷால்

By செய்திப்பிரிவு

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில் சிம்புவுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும், அவ்வப்போது தங்களுடைய பணி தவிர்த்து இதர திறமைகளையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வழியாக பல்வேறு நபர்களைப் பேட்டி எடுத்து வருகிறார். இவர் மாதவனை எடுத்த நேரலைப் பேட்டி பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதற்குப் பிறகு பல்வேறு நபர்களைப் பேட்டி கண்டவர், தற்போது நடிகர் விஷ்ணு விஷாலைப் பேட்டி எடுத்துள்ளார். அந்தப் பேட்டியில் கிரிக்கெட்டிலிருந்து எப்படி திரையுலகம் பக்கம் வந்தேன், திரையுலகப் பயணம் உள்ளிட்டவை குறித்து அஸ்வினின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார் விஷ்ணு விஷால்.

இந்தப் பேட்டியில் சிம்புவைப் புகழ்ந்துள்ளார் விஷ்ணு விஷால். படப்பிடிப்புத் தளத்தில் லைட்டிங் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போது சிம்பு குறித்து விஷ்ணு விஷால் கூறியிருப்பதாவது:

"படப்பிடிப்புத் தளத்தில் லைட்டிங் பண்ணுவார்கள். அப்போது நாம் அதற்கு நேராகத் திரும்பும்போது லைட்டிங் மேலேயே விழும். திரையுலகில் எனக்கு முதல் நண்பர் என்றால் அது சிம்புதான். இடையே சில நாட்கள் பேசவில்லை. அவர் மிகவும் திறமைசாலி.

'ராட்சசன்' படம் பண்ணும்போது சிம்புவைச் சந்தித்தேன். அந்தச் சமயத்தில் அவருடன் சுமார் 6 மணி நேரம் செலவழிக்க முடிந்தது. அந்தச் சமயத்தில் பல விஷயங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தார். அடுத்ததாக படப்பிடிப்புக்குச் சென்றவுடன் அவர் சொல்லிக் கொடுத்ததை எல்லாம் செய்து பார்த்தேன். அப்போது வியந்துவிட்டேன்.

சிம்பு சின்ன வயதிலிருந்தே நடிக்கிறார். அனைத்தையுமே விரல் நுனியில் வைத்திருப்பார். இயக்கம், இசை என அனைத்துமே செய்வார். சிம்பு சொல்லிக் கொடுத்ததைப் படப்பிடிப்பில் செய்து பார்த்தவுடன் எனக்குப் புதிதாகத் தெரிந்தது. அன்று முதல் படப்பிடிப்புக்குச் சென்றவுடன் எங்கெல்லாம் லைட்டிங் விழுகிறது என்பதெல்லாம் பார்த்து உள்வாங்கி நடிக்கத் தொடங்கினேன். அதற்கு முன்பு வரை லைட்டிங்கிற்கு எல்லாம் பெரிதாக முக்கியத்துவம் கொடுத்ததில்லை".

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE