சுஷாந்த் தற்கொலை விவகாரம்: முரணான பதில்களைக் கூறும் பன்ஸாலி, ஆதித்யா சோப்ரா

By ஐஏஎன்எஸ்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக சுஷாந்தின் நண்பர்கள், ஊழியர்கள், பாலிவுட் பிரபலங்கள் பலரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ‘ராம்லீலா’, ‘பத்மாவதி’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்ஸாலியிடமும், பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் நிறுவனத்திடமும் மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் பன்ஸாலி தான் இயக்கிய ‘ராம்லீலா’, ‘பாஜிராவ் மஸ்தானி’ ஆகிய படங்களுக்காக முதலில் சுஷாந்தை அணுகியதாகவும், தேதி ஒத்துவராததால் அந்த இரண்டு படங்களின் வாய்ப்பும் ரன்வீருக்குச் சென்றதாகவும் மும்பை போலீஸாரிடம் கூறியிருந்தார்.

‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தில் நடிப்பதற்காக சுஷாந்தை அனுமதிக்குமாறு யாஷ் ராஜ் நிறுவனத்தை 2015-ம் ஆண்டில் அணுகியதாக பன்ஸாலி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஷேகர் கபூர் இயக்கத்தில் ‘பாணி’ திரைப்படத்தில் சுஷாந்த் நடித்துக் கொண்டிருந்தார். இப்படத்தை யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்து வந்தது.

ஆனால், யாஷ் ராஜ் நிறுவனத்தின் ஆதித்யா சோப்ராவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தில் சுஷாந்தை நடிக்க அனுமதிக்கக் கோரி தங்களை பன்ஸாலி அணுகவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘எம்.எஸ் தோனி’ படத்தில் அவரை நடிக்க அனுமதியளித்தோம் என்றும் ஆதித்யா சோப்ரா கூறியுள்ளார்.

இதில் எந்தத் தகவல் உண்மை என்பதை மும்பை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE