'3 இடியட்ஸ்' தயாரிப்பாளர் மீது சேத்தன் பகத் புகார்: பாலிவுட்டில் உருவான புது சர்ச்சை

By செய்திப்பிரிவு

'3 இடியட்ஸ்' தயாரிப்பாளர் மீது எழுத்தாளர் சேத்தன் பகத் கூறியுள்ள புகாரின் மூலம் பாலிவுட்டில் புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமிர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி, கரீனா கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '3 இடியட்ஸ்’. 2009-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் இந்தியாவில் உள்ள கல்வி நிலையை விவாதத்துக்கு உள்ளாக்கியது. விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அமோக வரவேற்பைப் பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது.

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்க ரீமேக் செய்யப்பட்டது. தற்போது '3 இடியட்ஸ்' தொடர்பான சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.

இன்று (ஜூலை 21) மாலை முன்னணி எழுத்தாளர் சேத்தன் பகத், பாலிவுட்டில் உள்ள விமர்சகர்களைக் கடுமையாகச் சாடி சில ட்வீட்களை வெளியிட்டார். அவரது ட்வீட்களை மேற்கோளிட்டு விமர்சகர் அனுபமா சோப்ரா தனது ட்விட்டர் பதிவில் "ஒவ்வொரு முறையும் வார்த்தைகளின் தரம் இதைவிட தாழ்ந்து போகாது என்று நினைக்கும் போதெல்லாம் தாழ்ந்து போகிறது" என்று குறிப்பிட்டார்.

உடனடியாக சேத்தன் பகத், அனுபமா சோப்ராவின் ட்வீட்டை மேற்கோளிட்டுக் கூறியிருப்பதாவது:

"மேடம், உங்கள் கணவர் என்னைப் பொதுவெளியில் துன்புறுத்தியபோது, சிறந்த கதைக்கான அனைத்து விருதுகளையும் பெற்றபோது, எனது கதைக்கான உரிமையை மறுக்க முயற்சித்தபோது, என்னைத் தற்கொலைக்குப் பக்கத்தில் தள்ளியபோது நீங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்தீர்கள். அன்று உங்கள் வார்த்தைகள் எங்கே போயின".

இவ்வாறு சேத்தன் பகத் தெரிவித்துள்ளார்.

அனுபமா சோப்ராவின் கணவர்தான் '3 இடியட்ஸ்' உள்ளிட்ட பல முன்னணி படங்களைத் தயாரித்த விது வினோத் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

சேத்தன் பகத்தின் ட்வீட்களைத் தொடர்ந்து, பெரும் சர்ச்சை உருவானது. '3 இடியட்ஸ்' என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்டானது.

இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் சேத்தன் பகத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இது பலருக்குத் தெரியும். இங்கு புதியவர்களுக்குச் சொல்கிறேன். '3 இடியட்ஸ்' எனது '5 Point Someone' நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. அந்த வருடம் கதைக்கான அத்தனை விருதுகளையும் அந்தப் படம் வென்றது. எனக்கு அதில் எந்த விருதும் கிடைக்கவில்லை. அவர்களே அனைத்தையும் எடுத்துக் கொண்டார்கள். துறையில் செல்வாக்கு இல்லாத புதிய நபரான நான் துன்புறுத்தப்பட்டேன். அதனால் அதிகமாகப் பாதிக்கப்பட்டேன்

பகட்டான மேல்தட்டு விமர்சகர்களுக்குத் தனி வாட்ஸ் அப் குழுக்கள் உள்ளன. விமர்சனத்துக்கு முன் அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு படத்தையோ அல்லது நடிகரையோ சாட ஒன்றாக முடிவெடுப்பார்கள். அவர்களிடம் யாரும் பிரச்சினை செய்ய விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் ஒன்றுசேர்ந்து உங்களைச் சாடுவார்கள். எனவே மற்றவர்கள் அமைதி காப்பார்கள். பாலிவுட்டில் பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் நான் சொல்வதை உறுதிப்படுத்த முடியும்".

இவ்வாறு சேத்தன் பகத் தெரிவித்துள்ளார்.

சேத்தன் பகத்தின் ட்வீட்களை வைத்து, வாரிசு அரசியல் சர்ச்சையைத் தொடர்ந்து மீண்டும் ஒரு சர்ச்சை பாலிவுட் திரையுலகில் உருவாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE