உங்களுக்கு இருக்கும் சலுகையை ஒப்புக்கொள்ளுங்கள்: ஷ்ரத்தா தாஸ் காட்டம்

உங்களுக்கு இருக்கும் சலுகையை ஒப்புக்கொள்ளுங்கள் என்று வாரிசு அரசியல் தொடர்பான சர்ச்சையில் ஷ்ரத்தா தாஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்துகொண்டார்.

சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிறகு, இந்தித் திரையுலகில் வாரிசு அரசியல் சர்ச்சை பெருமளவில் வெடித்துள்ளது. வாரிசு அரசியல் இருக்கிறது என்று ஒரு தரப்பும், வாரிசு அரசியல் இல்லை என்று ஒரு தரப்பும் குற்றம் சாட்டி வருகிறது. சமீபத்தில் கங்கணா ரணாவத் அளித்த பேட்டியின் மூலம், மீண்டும் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக வெடித்துள்ளது.

இதனிடையே வாரிசு அரசியலை மறைமுகமாகச் சாடியுள்ளார் ஷ்ரத்தா தாஸ். தமிழ் தவிர்த்து இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் நடித்தவரான ஷ்ரத்தா தாஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"வாரிசு அரசியல் குறித்த விவாதங்களால் வெறுத்துப் போயிருக்கிறேன். ஒவ்வொரு துறையிலும் அது இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் வாரிசுகளுக்குத்தான் விட்டுச் செல்வார்கள் என்று சொல்லும்போது இன்னும் வெறுப்பாக இருக்கிறது.

அப்படியென்றால் எனது பெற்றோர் மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ இருந்தால் நான் அதற்காகப் படிக்காமலேயே, தேர்வு எழுதாமலே அந்தத் துறைக்கு வந்து மருத்துவர் அல்லது பொறியாளர் ஆக முடியுமா?

திரைப்படப் பின்னணி இல்லாமல், ஒரு சின்ன கதாபாத்திரம் கிடைக்கக் கூட 1000 தேர்வுகளை நடிகர் எதிர்கொள்ள வேண்டும். படத்தில் அந்தக் கதாபாத்திரம் இன்னும் சிறியதாக ஆக்கப்படும். விளம்பரமே இருக்காது. ஆனால் பின்னணி இருக்கும் ஒருவருக்கு நேரடியாக வாய்ப்பு கிடைக்கும். முதல் நாளிலிருந்தே அவரைச் சுற்றி திறமையான ஒரு படையே அவருக்காக வேலை பார்க்கும்.

உங்களுக்கு இருக்கும் சலுகையை ஒப்புக்கொள்ளுங்கள். போதும். இதைப் பற்றி விவாதிக்கும் பெரிய இயக்குநர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பின்னணி இல்லாத பெரும்பாலானவர்களுக்கு, உங்கள் படங்களின் வாய்ப்புக்காக உங்களைச் சந்திப்பதோ, தொலைபேசியில் தொடர்பு கொள்வதோ கூட முற்றிலும் சாத்தியமற்றது என்பது தெரியும். ஆனால், பின்னணி இருப்பவர்களுக்கு முதல் நாளிலிருந்தே சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கும்.

எல்லோருக்குமே எங்கோ எப்படியோ ஒரு வாய்ப்பு கிடைக்கும். இதில் வித்தியாசம் எங்கிருக்கிறது என்றால், முதல் பெரிய வாய்ப்பு கிடைக்கும் வரை எதிர்கொள்ளும் கஷ்டங்களின் அளவிலும் அதற்குப் பிறகான பயணம் என்ன என்பதிலும்தான்".

இவ்வாறு ஷ்ரத்தா தாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE