அருள்நிதி பிறந்த நாள் ஸ்பெஷல்: தரமான படங்களால் தனிக்கவனம் ஈர்த்த கலைஞர்

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் இன்றைய முன்னணி இளம் கதாநாயகர்களில் தனித்துவமான கவனத்தையும் ரசிகர்களின் நன்மதிப்பையும் பெற்றிருப்பவரான அருள்நிதியின் பிறந்த நாள் இன்று (ஜூலை 21).

தமிழ் சினிமாவில் நட்சத்திர திரைக்கதை, வசனகர்த்தாவாக கோலோச்சிவிட்டு தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்த கலைஞர் மு.கருணாநிதியின் மகன் வழிப் பேரனான அருள்நிதி, கலைத் துறையில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

2009-ல் வெளியான 'பசங்க' படம் பரவலான பாராட்டுகளையும் வணிக வெற்றியையும் பெற்றது. தேசிய விருதையும் வென்றது. அந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். அவர் இரண்டாவதாக இயக்கிய 'வம்சம்' படத்தின் நாயகனாக தமிழ் சினிமாவில் முதல் தடம் பதித்தார் அருள்நிதி.

சுயநலம் மிக்க காவல்துறை அதிகாரிகள் சிலரால் ஏற்படும் சீரழிவுகளையும் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடியும் என்ற அதிகாரத்துடன் அவர்கள் இருப்பதையும் பிரச்சார நெடியில்லாமல் அதே நேரம் அழுத்தமான விதத்தில் பதிவு செய்த வகையில் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான படம் சாந்தகுமார் இயக்கிய 'மெளனகுரு'. இது தவிர மனநலக் காப்பகங்களில் நிலவும் பிரச்சினைகளையும் அங்கு பணியாற்றுபவர்கள் சிலரின் ஊழல் மனப்பான்மையையும் பேசிய படமும்கூட. இதில் கதையின் நாயகனாக வெகு சிறப்பாக நடித்திருந்தார் அருள்நிதி. ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெற்றது இந்தப் படம்.

2013-ல் வெளியான 'தகராறு' மதுரையை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. 2014-ல் சிம்புதேவன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' திரைப்படமும் வித்தியாசமான கதையமைப்பைக் கொண்டிருந்தது. அடுத்து 2015-ல் வெளியான 'டிமான்ட்டி காலனி' அப்போது உருவாகியிருந்த திகில் படங்களின் போக்கை மாற்றியமைத்தது. பேய்ப் படம் என்றாலே அதில் நகைச்சுவையும் கலந்திருக்க வேண்டும் என்ற ஹாரர்-காமெடிப் படங்களுக்கு மாறாக பேய், ஆவி போன்ற அமானுஷ்ய விஷயங்கள் தர வேண்டிய திகில் அனுபவத்தை முழுமையாக அளித்த தரமான ஹாரர் படமாக அமைந்திருந்த 'டிமான்ட்டி காலனி' அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. அதோடு விமர்சகர்களின் பாராட்டையும் குவித்தது.

அறிவழகன் இயக்கிய 'ஆறாது சினம்' படத்தில் மனைவியை இழந்ததால் மதுபோதைக்கு அடிமையான முன்னாள் காவல்துறை அதிகாரி வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார் அருள்நிதி. ராதா மோகன் இயக்கிய 'பிருந்தாவனம்' படத்தில் படத்தின் பெரும்பகுதி வாய்பேச இயலாதவராக இருக்கும் எளிய இளைஞனாக வெகு சிறப்பாக நடித்திருந்தார்.

அறிமுக இயக்குநர்களான மு.மாறன், பரத் நீலகண்டன் ஆகியோர் இயக்கிய 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'கே-13' போன்ற திரைப்படங்களும் உள்ளடக்கத்திலும் உருவாக்கத்திலும் தரத்தில் புதிய உயரத்தைத் தொட்ட சஸ்பன்ஸ் த்ரில்லர் படங்களாக அமைந்தன.

தற்போது என்.ராஜசேகர் இயக்கும் படத்திலும் ஜீவா, ப்ரியா பவானிஷங்கர், மஞ்சிமா மோகன் ஆகியோருடன் 'களத்தில் சந்திப்போம்' என்ற மல்ட்டி - ஸ்டாரர் படத்திலும் நடித்துவருகிறார் அருள்நிதி. இவையும் அவருடைய திரைவாழ்வில் முக்கியமான திரைப்படங்களாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

கடந்த 10 ஆண்டுகளில் 11 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் அருள்நிதி. ஆனால் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகைமையைச் சேர்ந்த படங்கள் என்பதோடு அனைத்தும் வெகுஜன சட்டகத்துக்குள் பல வகைகளில் வித்தியாசமான படங்களாகவும் அமைந்திருந்தன. படங்களின் வெற்றி தோல்வியைத் தாண்டி வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுப்பவர், இமேஜ் என்னும் வலைக்குள் சிக்கிக்கொள்ளாத நடிகர் தரமான திரைப்படங்களைக் கொடுக்கும் தீவிர முனைப்பு கொண்டவர் என்பது போன்ற நற்பெயர்களையும் மதிப்பையும் பெற்றிருக்கிறார் அருள்நிதி. அவர் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் என்றென்றும் நீங்காத நன்மதிப்பையும் பெரும் புகழையும் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

மேலும்