மணிரத்னம் வெப் சீரிஸ்: ஃபகத் பாசிலிடம் பேச்சுவார்த்தை

By செய்திப்பிரிவு

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகவுள்ள வெப் சீரிஸில் நடிக்க ஃபகத் பாசிலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கரோனா நிலைமை சரியானவுடன் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

அதற்கு முன்னதாக அமேசான் நிறுவனத்துக்காக புதிதாக வெப் சீரிஸ் ஒன்றை மணிரத்னம் தயாரிக்கவுள்ளார். 'நவரசா' என்ற பெயரில் உருவாகும் இந்த வெப் சீரிஸ் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். இந்த 9 கதைகளையும் ஒன்றிணைத்து வெப் சீரிஸாகத் திட்டமிட்டுள்ளார் மணிரத்னம்.

மணிரத்னம், ஜெயந்திரா, கே.வி.ஆனந்த், சுதா, சித்தார்த், அரவிந்த்சாமி, பிஜாய் நம்பியார், கெளதம் மேனன் மற்றும் கார்த்திக் நரேன் ஆகியோர்தான் இந்த 9 கதைகளை இயக்கவுள்ளனர். இதன் மூலம் அரவிந்த்சாமி மற்றும் சித்தார்த் இருவருமே இயக்குநர்களாக அறிமுகமாகவுள்ளனர்.

இதில் அனைத்து இயக்குநர்களுமே அவர்களுக்கான கதைகளுக்கு நடிகர்களைத் தேர்வு செய்து வருகிறார்கள். இதில் சூர்யா, விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. தற்போது இதில் ஃபகத் பாசிலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்தக் கதைக்கு அவருக்கு பிடித்திருப்பதாகவும், விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது.

இந்த வெப் சீரிஸ் மூலமாக வரும் பணத்தைத் தொழிலாளர்களின் நலனுக்காகக் கொடுக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், இது தொடர்பாக மணிரத்னம் தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE