சிவாஜி நினைவு நாள் காணொலிக் கருத்தரங்கு: 'அப்பாவும் பிள்ளையும்' தலைப்பில் நாளை பிரபு உரை

By குள.சண்முகசுந்தரம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 19-வது நினைவு நாளையொட்டி இணையத்தில் நடந்துவரும் காணொலிக் கருத்தரங்கில் நிறைவு நாளான நாளை, ‘அப்பாவும் பிள்ளையும்’ என்ற தலைப்பில் நடிகர் பிரபு பேசுகிறார்.

சிவாஜி கணேசனின் 19-வது நினைவு நாளையொட்டி சர்வதேச அளவில் பல்துறை அறிஞர்கள் மற்றும் திரைக் கலைஞர்கள் கலந்துகொள்ளும் ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிப்பு முறைமைகளும்’ என்ற காணொலி வழிக் கருத்தரங்கு ஜூலை 15-ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

லண்டன் - அனாமிகா களரி பண்பாட்டு மையம், திருப்பத்தூர் - தூய நெஞ்சகக் கல்லூரியின் ‘மாற்று நாடக இயக்கம்,’ சென்னை - ‘யா-கார் தியேட்டர்’ நாடகக் குழு ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்தக் கருத்தரங்கு தினமும் மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவடைகிறது. கருத்தரங்கின் நிறைவு நாளான நாளை, ‘அப்பாவும் பிள்ளையும்’ என்ற தலைப்பில் நடிகர் பிரபுவும், ’தமிழ்த்திரை நடிப்பும் நடிகர் திலகமும்’ என்ற தலைப்பில் நடிகர் ராஜேஷும் கருத்தாக்கம் தருகிறார்கள்.

இந்தக் கருத்தரங்கின் முதல் நாளில், ‘சமுதாயப் பணியில் நடிகர் திலகம் சிவாஜி’ என்ற தலைப்பில் பேசிய சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவர் கே.சந்திரசேகரன், கருத்தரங்க அனுபவம் குறித்து நம்மிடம் பேசுகையில், “இந்தக் கருத்தரங்கில் சர்வதேச அளவிலான ஆளுமைகளை நேரில் கலந்துகொள்ள வைத்து இதை ஒரு மாநாடாக நடத்த வேண்டும் என்பதுதான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் முந்தைய திட்டமாக இருந்தது. ஆனால், கரோனா கட்டுப்பாடுகளால் அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. அதனால் இணைய வழியே கருத்தரங்கம் போய்க் கொண்டிருக்கிறது.

தினமும் இரண்டு ஆளுமைகள் நடிகர் திலகத்தைப் பற்றி தங்கள் பார்வையில் பேசுகிறார்கள். இடையிடையே சிறப்பு அழைப்பாளர்களும் ஒரு சில நிமிடங்கள் பேசிச் செல்கிறார்கள். ஜூம் செயலி வழியே நடக்கும் இந்தக் கருத்தரங்கில் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மற்றும் அபிமானிகள் சுமார் 30 பேர் கலந்துகொள்கிறார்கள். கருத்தரங்கப் பேச்சாளர்கள் இவர்களின் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார்கள்.

கருத்தரங்க நிகழ்வுகள் பெருவாரியானவர்களைச் சென்று சேரவேண்டும் என்பதற்காக கூத்துக்களம் என்ற யூடியூப் சேனல் வழியாகவும் நேரலை செய்யப்படுகிறது” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “நடிகர் திலகத்தைப் பற்றி நாம் அறிந்திராத பல விஷயங்கள் இந்தக் கருத்தரங்கம் வழியாக நமக்குத் தெரியவருகிறது. கனடாவிலிருந்து பேசிய நண்பர் ஒருவர், ‘ஈழப் போராட்டத்தின் ஆரம்பக் காலத்தில் உத்வேகம் தந்த நடிகர் திலகத்தின் நடிப்பு’ என்ற தலைப்பில் பேசினார். 1970-களிலும் ஓர் ஈழப் போர் நடந்திருக்கிறது. அந்தச் சமயத்தில் ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தை இலங்கையில் திரையிடத் தடை விதிக்கப்பட்டதாம். இந்தத் தகவலை கனடா நண்பர் சொன்னதைக் கேட்டபோது வியப்பாக இருந்தது.

இதுபோல நடிகர் திலகத்தைப் பற்றிய பல அரிய கருத்துகளைப் பல்வேறு கோணங்களில் உலகம் முழுவதுமுள்ள அறிஞர்களும், கலைஞர்களும் வழங்கியது மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு நாளும் நடிகர் திலகத்தைப் பற்றிய புதுப் புது தகவல்களை அறிந்துகொள்ளும் விதத்தில் அமைந்துள்ள இந்தக் கருத்தரங்கை உள்வாங்கும்போது, தமிழ் உள்ளளவும், கலை உள்ளளவும் நடிகர் திலகம் வாழ்வார் என உணர முடிகிறது” என்று சந்திரசேகரன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE