நான் கசப்பாக இருக்க விரும்பவில்லை: கங்கணாவின் குற்றச்சாட்டுகளுக்கு டாப்ஸி பதில்

By செய்திப்பிரிவு

தான் கசப்பாக இருக்க விரும்பவில்லை என்றும், தனிப்பட்ட வஞ்சகத்துக்காக ஒருவரது மரணத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றும் நடிகை டாப்ஸி கூறியுள்ளார்.

இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட்டின் வாரிசு அரசியல் குறித்தும், வாரிசு அல்லாத நடிகர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் பகிரங்க குற்றச்சாட்டுகளை நடிகை கங்கணா ரணாவத் முன்வைத்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில், "வாய்ப்புகளைத் தேடும் டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர் போன்ற வெளியாட்கள், தங்களுக்கு இந்தத் துறை பிடிக்கும் என்பார்கள். உங்களுக்கு இந்தத் துறை பிடிக்குமென்றால், கரண் ஜோஹரைப் பிடிக்கும் என்றால் ஏன் ஆலியா, அனன்யாவைப் போல உங்களுக்கு வாய்ப்புகள் வருவதில்லை? அவர்கள் துறையில் இருப்பதே வாரிசு அரசியலுக்கான அத்தாட்சி" என்று கங்கணா பேசியிருந்தார்.

தற்போது இதற்கு நடிகை டாப்ஸி பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக டாப்ஸி கூறியிருப்பதாவது:

"வெளியிலிருந்து வருபவர்களைப் பற்றி, எங்களுக்கு நிறைய தந்திருக்கும் துறையைப் பற்றி இப்படி மட்டமாகப் பேசுவதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. துறைக்குள் வரும் புதியவர்களின் பெற்றோர் எங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்? நாங்கள் ஏதோ வெளியிலிருந்து வருபவர்களை ஒழித்துக் கட்டும் மோசமானவர்கள் என்றுதானே?

கரண் ஜோஹரைப் பிடிக்கும் என்று நான் எங்குமே சொன்னதில்லை. ஆனால் அவரைப் பிடிக்காது என்றும் சொல்லவில்லை. உங்களுக்குப் பிடிக்காத நபரை இன்னொருவருக்கும் பிடிக்கவில்லை என்றால் அப்போது அந்த இன்னொருவர் அந்த நபரிடம் வாய்ப்பு தேடுகிறார் என்று அர்த்தமா? இந்தத் தர்க்கமே தவறு.

அடிப்படையில் என் தோற்றத்தினால் மட்டுமே எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்று நான் நினைக்கவில்லை. எனக்கும் போராட்டங்கள் இருந்திருக்கின்றன. நான் அதைப் பெரிதாக்குவதில்லை. நேர்மறையான சிந்தனையோடு அதைக் கையாள்கிறேன். எனவே, நானும் வெளியிலிருந்து வந்த மற்ற நடிகர்களைப் போலத்தான்.

எதிர்மறை விஷயங்கள் இருந்தாலும் கூட நான் அதையும், வெறுப்பையும் மற்றவர்களுக்குக் காட்டமாட்டேன். ஏனென்றால் அது என் மன முதிர்ச்சியைத் தடுக்கும். கங்கணாவுக்கு ஒரு கருத்து இருக்க எல்லா உரிமையும் இருப்பதைப் போலவே எனக்கும் உண்டு. எனது கருத்து அவரோட உடன்படவில்லை என்பதால் நான் தாழ்ந்துவிடமாட்டேன்.

கடந்த 3 வருடங்களாக, வருடத்துக்கு 4 படங்களில் நடித்து வருகிறேன். ஐந்து திரைப்பட அறிவிப்புகள் வரவுள்ளன. எனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்று யார் சொன்னது? நான் நிதானமாக, நிலையாக எனது திரைப்பயணம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆம்! எனக்குப் பதிலாக சில படங்களில் வாரிசு நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், எனது கடின உழைப்பை மட்டமாகப் பேசும், தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும், கங்கணாவும் அவர் சகோதரி ரங்கோலி செய்வதும் அதே அளவு துன்புறுத்தல்தான்.

அவர் ஏன் அப்படிச் செய்கிறார் என்றால் அவர் சொல்வதை நான் ஏற்காமல், வெளியிலிருந்து வந்தவர்களுக்கு அவர்தான் கொடிதாங்கி என்பதைப் போல அவரைப் பார்க்காமல் இருப்பதால்தான்.

கங்கணா தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் எந்த ஒரு மாஃபியா கூட்டமும் எனது படங்களை இதுவரை தயாரித்ததில்லை, தயாரிக்கப் போவதுமில்லை. எனவே எப்படி நான் இருப்பது வாரிசு அரசியலுக்கான அத்தாட்சி? மற்றவர்களின் வெற்றிக்கான காரணத்தைத் தவறாகப் பேசுவதன் மூலமாகத்தான் நீங்கள் உங்களை வெற்றிகரமானவர் என்று காட்டிக்கொள்ள முடியுமா?

நான் கசப்பாக இருக்க விரும்பவில்லை. என் தனிப்பட்ட வஞ்சகத்தைத் தீர்க்க ஒருவரின் மரணத்தை எனக்குச் சாதகமாக்கிக் கொள்ள விரும்பவில்லை. எனக்கு வாழ்வாதாரம் அளித்த துறையைக் கேலி செய்ய விரும்பவில்லை. 'பதி பத்னி அவுர் வோ' திரைப்படத்தில் என்னை மாற்றியதற்கு எதிராக நான் குரல் கொடுத்தேன். ஒரு தவறான செயலைத் தட்டிக் கேட்டேன். படத்தின் இயக்குநரும் எனக்கு ஆதரவுக் குரல் தந்தார். எனவே, நான் பிரச்சினைகளைப் பற்றி பேசப் பயப்படுவேன் என்று கிடையாது. சரியான நோக்கத்தோடு நாம் பேசும்போது மக்கள் நம்மை ஆதரிப்பார்கள்".

இவ்வாறு டாப்ஸி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE