மாற்றங்களை நான் ஒதுக்கியது கிடையாது: கெளதம் மேனன்

புதிய மாற்றங்களை நான் என்றும் ஒதுக்கியது கிடையாது என்று கெளதம் மேனன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தற்போது 'ஜோஷ்வா: இமை போல் காக்க' என்னும் படத்தை இயக்கி வருகிறார். அதை முடித்துவிட்டு விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் இறுதிகட்டப் பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பணிகளை முடித்துவிட்டுத் தான், தனது அடுத்த படத்துக்கான பணிகளை கவனிக்கவுள்ளார். இதற்காக தயார் செய்துள்ள கதைகளை முன்னணி நடிகர்களிடம் கூறிவருகிறார். இது தொடர்பாக அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பு எப்படி நடக்கும் உள்ளிட்டவை குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் "சமூக இடைவெளி, முகக் கவசங்கள், இதை வைத்து எப்படி படப்பிடிப்பு?" என்ற கேள்விக்கு கெளதம் மேனன் கூறியிருப்பதாவது:

"புதிய மாற்றங்களை நான் என்றும் ஒதுக்கியது கிடையாது. மேலும், நான் வழக்கமாகப் பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பவன் கிடையாது. இப்போது ஏற்கனவே ஓடிடி தளங்களுக்கான படைப்புகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே தயாரிப்பில் இருக்கும் திரைப்படங்களின் வேலைகளும் நடந்து வருகின்றன. இந்த சூழல் என் எழுத்தை பாதிக்கக் கூடாது என்றே நான் பார்க்கிறேன். வெளிநாட்டில் ஒரு கட்ட படப்பிடிப்பு இருக்கிறது. திட்டமிட்டுள்ளோம். மீண்டும் சூழல் சகஜமாகும் என்று நம்புகிறேன்"

இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் சூழலை வைத்து காட்சிகளை எழுதுகிறீர்களா என்ற கேள்விக்கு கெளதம் மேனன், "ஒரு புதிய காட்சியை யோசிக்கும் போது, ரசிகர்கள் இது கோவிட்-19க்கு முன்பா, பின்பா என யோசிப்பார்களா என்ற சிந்தனையும் வருகிறது. அது என்னை பாதிக்கிறது.

உண்மையில், சமீபத்தில் நான் ஒரு அரை மணி நேர குறும்படக் கதையை எழுதினேன். ஆனால் முகக் கவசங்கள், குறைவான நபர்களை வைத்து அதை படம்பிடிக்க வேண்டுமா என்பது குறித்து என்னால் முடிவு செய்ய முடியவில்லை. கடைசியில் முகக் கவசங்கள் இல்லாமல், அது எங்க காலகட்டம் என்று குறிப்பிடாமல் முடித்தோம்"

இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE