காவல்துறையைப் பற்றி படமெடுத்ததில் வருத்தமில்லை: கெளதம் மேனன்

By செய்திப்பிரிவு

காவல்துறையைப் பற்றித் திரைப்படம் எடுத்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கெளதம் மேனன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கெளதம் மேனன். அவருடைய இயக்கத்தில் வெளியான 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு' மற்றும் 'என்னை அறிந்தால்' உள்ளிட்ட படங்கள் காவல்துறையினர் மத்தியில் மிகவும் பிரபலம்.

சில தினங்களுக்கு முன்பு சாத்தான்குளம் நடைபெற்ற சம்பவத்தால் காவல்துறையினரை பலரும் சாடியிருந்தார்கள். தான் காவல்துறையைப் போற்றி 5 படங்கள் எடுத்ததிற்காக வருத்தப்படுவதாக இயக்குநர் ஹரி தெரிவித்திருந்தார். தமிழ்த் திரையுலகினர் பலரும் காவல்துறையினர் திட்டித் தீர்த்தார்கள்.

இதனிடையே காவல்துறையினர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இயக்குநர் கெளதம் மேனன் கூறியிருப்பதாவது:

"காவல்துறையைப் பற்றித் திரைப்படம் எடுத்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. 'நாங்க போலீஸ் ஆனதே உங்களாலத்தான்' என்று என்னிடம் சொன்னவர்கள் இருக்கிறார்கள். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நான் காவல்துறை சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அங்கு சில இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் என்னிடம் வந்து, 'காக்க காக்க' பார்த்ததால் தான் நான் ஐபிஎஸ் ஆனேன். 'வேட்டையாடு விளையாடு' பார்த்த பின் தான் நான் இந்த முடிவை எடுத்தேன் என்று சொன்னார்கள்.

நாம் தாண்டக் கூடாத ஒரு மெல்லிய கோடு ஒன்று உள்ளது. நாம் அதை மீறுவது போல நினைத்துப் பார்ப்போம். ஆனால் சிலர் நிஜத்தில் மீறுவார்கள். ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் அந்தக் கோட்டைத் தாண்ட மாட்டோம். அது காவல்துறைக்குள்ளும் உள்ளது.

நிறைய நேர்மையான, முறையான அதிகாரிகள், இந்த அமைப்புக்குள் வேலை செய்து, அனைத்தையும் ஒழுங்காகக் கையாள்கிறார்கள். சிலர் எல்லை மீறுகிறார்கள். அந்த இடத்தில் அவர்களுக்கான தலைமை, அந்தத் தலைமை அவர்கள் கீழ் பணிபுரியும் மற்ற அதிகாரிகளை எப்படி வைக்கிறது என்பதைப் பொறுத்தே இது நடக்கும் என நான் நினைக்கிறேன்"

இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE